டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த கவாய் ஒய்வுபெற்ற நிலையில், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ள நீதிபதி சூர்யகாந்த் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 7, 2000 அன்று ஹரியானாவின் மிக இளைய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டடார். அதைத் தொடர்ந்து, மார்ச் 2001-ல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 9, 2004 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக உயர்த்தப்படும் வரை அவர் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) ஆளும் குழுவில் பிப்ரவரி 23, 2007 அன்று இவர் உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார், மேலும் பிப்ரவரி 22, 2011 வரை தொடர்ந்து 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார். தற்போது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் கீழ் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமான இந்திய சட்ட நிறுவனத்தின் பல்வேறு குழுக்களில் அவர் உறுப்பினராக உள்ளார். நவம்பர் 12, 2024 முதல் அவர் உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.