ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) புதன்கிழமை காலை மாரடைப்பால் இறந்தார். இந்த சம்பவத்திற்கு அவரது குடும்பத்தினர் SIR பணியே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
நவம்பர் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் நான்கு BLOக்கள் தற்கொலை/மாரடைப்பால் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தானின் சேவ்தி குர்தில் உள்ள அரசுப் பள்ளியில் கிரேடு-3 ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ஹரிராம் என்ற ஹரி ஓம் பைர்வா (34) என்பவர் BLO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தப் பணி தொடர்பாக அதிகாரிகள் அவருக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த ஆறு நாட்களாக அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக ஹரிராம் வீட்டில் அதிகம் பேசுவதில்லை என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
ஹரிராம் மிகுந்த அழுத்தத்தில் வேலை செய்து வந்தார். அவர் இரவு வெகுநேரம் வரை வேலை செய்து அதிகாலையில் எழுந்திருப்பார் என்று அவரது சகோதரர் ஆஷிஷ் பைர்வா கூறினார்.
இந்த நிலையில், தாசில்தாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த சில நிமிடங்களில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
தாசில்தாரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று ஹரிராமின் தந்தை பிரிஜ்மோகன் பைர்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தாசில்தார் மறுத்துள்ளார். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே தான் பணிசெய்வதாகக் கூறியுள்ளார்.