குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ரத்தன் மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு ஆண் புலி வசித்து வருவதை வன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆசிய சிங்கத்தின் கடைசி வசிப்பிடமாக அறியப்படும் குஜராத், இப்போது சிங்கம், சிறுத்தை மற்றும் புலி ஆகிய மூன்று முக்கிய இனங்களையும் கொண்ட இந்திய மாநிலங்களின் அரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

32 ஆண்டுகளில் முதல் முறையாக, வங்கப் புலி ஒன்று மாநிலத்தில் நிரந்தர வசிப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குஜராத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மீண்டும் வனவிலங்கு எண்ணிக்கையை ஆதரிக்கும் திறன் கொண்டவையாக மாறிவரும் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பதாக வன விலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

சுமார் ஐந்து வயதுடையதாக மதிப்பிடப்பட்ட இந்தப் புலி, மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மற்றும் கதிவாடா பகுதிகளை ஒட்டியுள்ள ரத்தன் மஹால் எல்லைப் பகுதிகளில் முதன்முதலில் காணப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அருகிலுள்ள காடுகளில் சமீபத்திய ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் வலுவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், புதிய வசிப்பிடத்தைத் தேடி இந்த விலங்கு இயற்கையாகவே இடம்பெயர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு முதன்முதலில் காணப்பட்டதிலிருந்து, குஜராத் வனத்துறை கேமரா பொறிகள் மற்றும் களக் குழுக்களைப் பயன்படுத்தி புலியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரத்தன் மஹாலின் அடர்ந்த காடுகளுக்குள் அதன் நீடித்த இருப்பை உறுதிப்படுத்தும் தெளிவான புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகள் இப்போது வெளியிட்டுள்ளனர்.

1980கள் மற்றும் 2000த்தின் முற்பகுதியில் காணப்பட்ட தற்காலிகக் காட்சிகளைப் போலல்லாமல், இந்தப் புலி குஜராத்தின் எல்லைகளுக்குள் நீண்ட காலத்திற்கு தங்கியுள்ளது, இது சாதகமான வாழ்விட நிலைமைகளின் குறிகாட்டி என்று தெரிவித்துள்ளனர்.

புலியின் நீண்டகால உயிர்வாழ்வை ஊக்குவிக்க போதுமான இரை அடர்த்தி மற்றும் வாழ்விடப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் இப்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.