டெல்லி: ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

எஸ்ஐஆர் தொடர்பான விமர்சனப் பகுப்பாய்வுக்குப் பதிலாக நாடகத்தன்மை வந்துள்ளது. பொதுச் சேவைக்கு பதிலாக பொது விவாதம் இடம்பிடித்துள்ளது என்று கூறியிருப்பதடன், நமது நாட்டின் ஆயுதப்படைகள், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற நிறுவனங்கள் மீது வைத்த விமர்சனங்களை கடுமையாக கண்டித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல் காந்தியின் தாக்குதல்கள் குறித்து முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த இராணுவ வீரர்கள் உட்பட 272 பிரமுகர்கள் அடங்கிய குழு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளது.
தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட “இயலாமையின் கோபத்தை” (impotent rage) அவர் வெளிப்படுத்துவதாகவும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (இ.சி.ஐ) நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சி செய்வதாகவும் அக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக கையைழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், , “இந்தியாவின் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பலவந்தமாக இல்லாவிட்டாலும், ஜனநாயகத்தின் அடித்தளதின் ஓர் அங்கமான தேர்தல் ஆணையத்தை நோக்கி நச்சுப் பேச்சு அலைகள் இயக்கப்படுகின்றன. சில அரசியல் தலைவர்கள், மக்களுக்காக உண்மையான கொள்கைகளை கொண்டு சேர்க்காமல், தங்களது நாடக அரசியல் உத்தியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாடுகிறார்கள்.
“வாக்குத் திருட்டு” என்ற குற்றச்சாட்டுகளுடன் தேர்தல் ஆணையத்தை மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளார் என்றும், “நம்ப முடியாத அளவிற்கு அநாகரீகமான மொழியைப்” பயன்படுத்துவதாகவும், அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் அவர்களை “வேட்டையாட” போவதாகவும் அச்சுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் சாதனைகளை கேள்விக்குறியாக்கினார்கள். நீதித்துறையையின் நியாயத்தன்மை, பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை விமர்சித்து அரசியலமைப்பை கேள்விக்குறியாக்க முயற்சித்தனர். தற்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் நேர்மையை கையிலெடுத்துள்ளனர். அவர்களின் (எதிர்க்கட்சியினர்) இந்த சாதித்திட்ட தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.
தேர்தல் ஆணையத்தை மீண்டும் மீண்டும் தாக்கி, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அவர் (ராகுல் காந்தி) அறிவித்துள்ளார். வாக்கு திருட்டு தொடர்பாக தான் கண்டுபிடித்த ஆதாரங்கள் அணுகுண்டு போல வெடிக்கும். தேர்தல் ஆணையத்தில் யார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை விடமாட்டேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். சம்மந்தப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரி ஒய்வு பெற்று இருந்தாலும் அவர்களை வேட்டையாடுவேன் என்கிறார். இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர், நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்துடன், முறையான புகார் எதுவும் தாக்கல் செய்யவில்லை.
‘வாக்கு திருட்டு’ என்பது பண்பாடற்ற சொல்லாட்சி… என்று விமர்சித்துள்ளடுன், இது உணர்ச்சி ரீதியாக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம் ஆனால், அது ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது சரிந்துவிடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர்மீது கடுமையான பொதுக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், ராகுல் காந்தி தேவையான பிரமாணப் பத்திரத்துடன் கூடிய முறையான புகாரை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றும், இதனால் அவர் சரிபார்க்கப்படாத கூற்றுகள் மற்றும் பொது அதிகாரிகளை அச்சுறுத்துவதற்குப் பொறுப்பேற்காமல் தப்பிக்கிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நடத்தை, அரசியல் பின்னடைவுகளை நிறுவன நெருக்கடிகளாக மாறுவேடமிட்ட முயற்சி போல் தோன்றுகிறது என்றும், தலைவர்கள் சாதாரண குடிமக்களுடனான தொடர்பை இழக்கும்போது, தங்களை சுயபரிசோதனை செய்து நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக நிறுவனங்களைக் குறை கூறுவதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தின்மீதான இத்தகைய சொற்கள் “உன்னிப்பான ஆய்வில் சரிந்துவிடும்” என்றும், இந்திய தேர்தல் ஆணையம் தனது எஸ்.ஐ.ஆர் வழிமுறையை பொதுவில் வெளியிட்டுள்ளது, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சரிபார்ப்புக்கு அனுமதித்துள்ளது, தேவைக்கேற்ப தகுதியற்ற வாக்காளர்களை நீக்கியுள்ளது, தகுதியுள்ள புதிய வாக்காளர்களைப் பட்டியலில் சேர்த்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதுபோன்ற விஷயங்களில், “விமர்சனப் பகுப்பாய்வுக்குப் பதிலாக நாடகத்தன்மை வந்துள்ளது. பொதுச் சேவைக்கு பதிலாக பொது விவாதம் இடம்பிடித்துள்ளது” என்றும், ராகுல் காந்தி ஆயுதப்படைகள், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற நிறுவனங்கள் மீது வைத்த விமர்சனங்களை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், முன்னாள் நீதிபதிகளான எஸ்.என்.திங்ரா, ஹேமந்த் குப்தா மற்றும் ராஜீவ் லோச்சன், ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி, என்.ஐ.ஏ-வின் முன்னாள் இயக்குநர் ஒய்.சி.மோடி மற்றும் பலர் கையெழுத்திட்ட அந்த அறிக்கையில், ராகுல் காந்தியின் நடத்தை ஆக்கபூர்வமான அரசியல் அணுகுமுறைக்கு பதிலாக விரக்தியைப் பிரதிபலிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரசின் சில மூத்த தலைவர்கள், பிற அரசியல் கட்சி உறுப்பினர்கள், இடதுசாரி என்.ஜி.ஓ-க்கள், சித்தாந்தத்தால் உந்தப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் ஒரு சில “கவனத்தை ஈர்க்க முயல்பவர்கள்” ராகுல் காந்தியின் கடுமையான தாக்குதல்களை எதிரொலிப்பதாகவும், தேர்தல் ஆணையத்தை “பா.ஜ.க-வின் பி-டீம்” என்று அழைப்பதாகவும், மேலும் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையை விமர்சிப்பதாகவும் அக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டு என்பது அரசியல் விரக்தியை மறைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. மக்களின் ஆதரவை பெற முடியாமலும், தேர்தல் தோல்வியினால் ஏற்பட்டுள்ள கோபத்தைத்தான் இது எதிரொலிக்கிறது” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் தேர்தல் முடிவுகளை மதித்து, அரசியலமைப்பு செயல்முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியது.
இந்திய ஜனநாயகத்தின் அத்தியாவசியக் காவலர்களாக இந்திய ஆயுதப்படைகள், நீதித்துறை, நிர்வாகம் மற்றும் குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் மீது தாங்கள் நம்பிக்கை வைப்பதாகவும் அந்த கடிதத்தில் தெளிவுபடுத்தி உள்ளனர்.