சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது; ‘கருதப்பட்ட ஒப்புதல்’ என்ற கருத்து இல்லை என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேவேளையிவ்ல, காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க ஆளுநரை உத்தரவிட நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்றும்குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு செய்த குறிப்பிற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் 200/201 பிரிவுகளின் கீழ் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் முடிவுகளுக்கு நீதிமன்றம் எந்த காலக்கெடுவையும் விதிக்க முடியாது என்று இன்று (நவம்பர் 20) தீர்ப்பளித்தது. காலக்கெடு மீறப்பட்டால், மசோதாக்களுக்கு “கருதப்பட்ட ஒப்புதல்” என்று நீதிமன்றங்கள் அறிவிக்கும் கருத்து அரசியலமைப்பின் ஆன்மாவிற்கு எதிரானது மற்றும் அதிகாரப் பிரிவின் கோட்பாட்டிற்கு எதிரானது என்று நீதிமன்றம் மேலும் கூறியது. நீதிமன்றங்கள் “கருதப்பட்ட ஒப்புதல்” என்று அறிவிக்கும் கருத்து, ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை கிட்டத்தட்ட எடுத்துக் கொள்வதாகும் என தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி விசாரிக்க முடியாது என்றும், காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சட்டமன்ற செயல்முறையை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் நீண்ட கால தாமதம் செய்தால், மசோதாவின் தகுதிகள் குறித்து எதையும் கவனிக்காமல், காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க ஆளுநரை உத்தரவிட நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
ஒரு மாநிலத்தில் 2 அதிகார அமைப்புகள் இருக்க முடியாது என ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.
அதே நேரத்தில் காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், காரணமின்றி நீண்ட காலத்திற்கு மசோதா மீது முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்யும் என ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மசோதாக்களை ஏற்பதில் மாநில அரசின் ஆலோசனையை ஆளுநர் ஏற்க வேண்டியதில்லை என்றும், ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆளுநர், குடியரசு தலைவரின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது என ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா மற்றும் நீதிபதி ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை பத்து நாட்கள் விசாரித்து, செப்டம்பர் 11 அன்று தனது கருத்தை ஒத்திவைத்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் முடிவில் ஆளுநர் மட்டுமின்றி குடியரசு தலைவரும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதையடுத்து குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மசோதாக்களில் செயல்படுவதற்கான காலக்கெடுவை நீதிமன்றங்கள் பரிந்துரைக்க முடியுமா? என 14 கேள்விகள் அடங்கிய மனு குடியரசு தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் கேள்வி எழுப்பி நீதிமன்றம் தனது ஆலோசனைகளை வழங்கும் இந்த அரிய நிகழ்வானது, அதிகாரப் பிரிப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
‘தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிவில், சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு மாத காலக்கெடுவையும், குடியரசு தலைவருக்கு மூன்று மாத கால அவகாசத்தையும் நிர்ணயித்தது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 மசோதாக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, அரசியலமைப்புச் சட்டம் 142 வது பிரிவையும் பயன்படுத்தி அறிவித்தது. இது தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆளுநர்களை வைத்து அரசியல் செய்யும் மத்திய அரசுக்கு இது ஒரு சவுக்கடி என தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் தெரிவித்தனர்.
குடியரசு தலைவரின் கேள்விகள்
இதையடுத்து காலக்கெடு நிர்ணயித்திற்கு எதிராக குடியரசு தலைவர் 14 கேள்விகள் அடங்கிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு விருப்பங்கள் என்ன?
இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, தன்னிடம் உள்ள அனைத்து விருப்பங்களையும் பயன்படுத்தி, அமைச்சரவை வழங்கும் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
இந்திய அரசியலமைப்பின் 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா? உள்ளிட்ட கேள்விகள் அடங்கியிருந்தன
5 நீதிபதிகள் கொண்ட அமர்வு:
குடியரசு தலைவர் மனு மீது, தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்ம மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நீண்ட நெடிய விசாரணையை தொடங்கியது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தன. அதேநேரம், பாஜக ஆளும் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. நீதித்துறையால் உருவாக்கப்பட்ட காலக்கெடு அரசியலமைப்பு நெருக்கடிகளைத் தூண்டக்கூடும் என்று குடியரசு தலைவர் சார்பில் வாதிடப்பட்டது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் செப்டம்பர் 11ம் தேதி அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 23ம் தேதியுடன் தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெற உள்ள நிலையில், இன்று குடியரசு தலைவரின் மனு மீது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது. இதில் குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு செல்லுமா? செல்லாதா? என்பது இறுதி செய்யப்பட உள்ளது.