டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசு  விரிவான விளக்கம் வெளியிட்டுள்ளது.

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ள நிலையில், அதுகுறித்து மத்தியஅரசு விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.  மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்,  20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில்தான் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது.

தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால், இந்தத் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி, தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்நிலையில், இத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கி மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தில் உள்ள சிக்கல்கள்: கோவையில் 34 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள சாலைப் போக்குவரத்தின் பயண நேரமே, உத்தேசிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயண நேரத்தை விடக் குறைவாக உள்ளது. இதனால் மக்கள் மெட்ரோ ரயிலுக்கு மாற வாய்ப்புகள் குறைவு எனக் கருதப்படுகிறது. கோவையின் மக்கள் தொகை 15.84 லட்சமாக உள்ளது. சென்னை மெட்ரோவின் முதற்கட்ட திட்டத்தோடு ஒப்பிடுகையில், இங்குப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 4 லட்சம் பேர் மட்டுமே அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 மெட்ரோ திட்டத்திற்கான தடைகள்:

ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமானால், அந்த நகரத்தின் மக்கள் தொகை குறைந்தபட்சம் 20 லட்சமாக இருக்க வேண்டும்.ஆனால் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள்தொகை 15 லட்சம் மட்டுமே உள்ளது. இது மெட்ரோ அமைப்பதற்கான தகுதி வரம்பிற்குள் வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் போது பல கட்டிடங்களை இடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு இடிக்கப்படும் கட்டிடங்கள் மிக அதிக மதிப்புடையதாக இருக்கலாம். இது பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, திட்டச் செலவையும் அதிகரிக்கக்கூடும்.

20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவது நடைமுறைக்கு உகந்தது.

இவ்வாறு .மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்  தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.