கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று நாளையுடன் (நவ். 20) இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதையடுத்து முதல்வர் பதவி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவகுமாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் மட்டுமன்றி அம்மாநில அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2023 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பெரிதும் உழைத்த டி.கே. சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிருப்தியில் இருந்த ஆதரவாளர்களிடம் இரண்டரை ஆண்டுகள் கழித்து டி.கே.எஸ்.க்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சித்தராமையா முதல்வராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைவதால் கடந்த ஒரு வாரமாக கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்து பேசினார்.
கார்கே உடனான சந்திப்பின் போது கர்நாடக மந்திரிசபையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து திங்களன்று டெல்லி சென்ற டி.கே. சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர்.
அப்போது, டி.கே. சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர சித்தராமையாவை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராகுல் காந்தியிடம் விவாதிக்க கார்கே ஆலோசனை கூறியதாக தகவல் வெளியான நிலையில் இன்று மீண்டும் டெல்லி செல்லும் டி.கே.எஸ். ஆதரவாளர்கள் அங்கு ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் இந்த தொடர் டெல்லி படையெடுப்பு காரணமாக அம்மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளதோடு மந்திரி சபை மாற்றமா ? முதல்வர் மாற்றமா ? எது நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.