சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தனது இரண்டாம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை கொட்டிய நிலையில்,சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கடந்த இரு நாட்களை கடந்து தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதையடுத்து, இன்று சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த மாவட்டங்களில் இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடக்கமே அதிரடி மழையால் அகளப்பட்டது. அக்டோபர் மாதம் மத்தியில் அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்களால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து கடந்த வாரம் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பருவ மழையானது கொட்ட தொடங்கியுள்ளது.  வங்கக்கடலில் இலங்கை நிலப்பகுதியில் உருவான டிட்வா புயல், இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நீடிக்கின்ற தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மட்டும் கடந்த இரு நாட்களாக பெய்து வந்த மழை இன்றும்  தொடர்கிறது. தாழ்வு பகுதி  வடசென்னை ஆந்திரா நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால்,   இன்றும், நாளையும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில்  நேற்று முதல் முதல் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க வருகிறது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 3வது நாளாக மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் நேற்று முதல் குளுமையான வானிலையே நீடித்து வருகிறது. லேசான தூறலோடு காற்றும் வீசி வருகிறது. இதனால் இதமான வானிலையை சென்னை மக்கள் ரசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில்  வலுவிழந்து உள்ள டிட்வா புயல் அடுத்த 24 மணிநேரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  சென்னைக்கு அருகேயே நீடிக்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இன்று  இரவு வரை விட்டு விட்டு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது. மேலும்,  இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான  விடுக்கப்பட்டுள்ளது. னமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் என்னதான் மோட்டார்கள் மூலம் மழை நீரை ஒரு பக்கம் இருநது மறுபக்கம் வெளியேற்றினாலும் மீண்டும் மீண்டும் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில் டிசம்பவர் 1ந்தேதி (நேற்று) கடும் மழையில் பள்ளிகள் செயல்பட்டது, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே தொடர் மழை பெய்து வருவதால், இன்று  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

இதனிடையே, இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எந்த மாவட்டங்களில் மழை காரணமாக கல்லூரிகளுக்கு 02.12.2025 அன்று அரசு விடுமுறை அறிவித்திருக்கிறதோ, அந்த மாவட்டங்களில் 02.12.2025 அன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த மாவட்டங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

கனமழையால் இன்று  (02.12.2025) நடைபெறுவதாக இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.