சென்னை: சாம்சங் ஆலை நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சாம்சங் ஆலைக்கு எதிராக போராடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளித்த நிர்வாகம், அதை செயல்படுத்தாமல் 27 பேரை பணி நிக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து, சாம்சங் , நிர்வாகத்தை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் தொழிலாளர்கள் 2024ம் ஆண்டு (09.09.2024 ) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அரசு, நிர்வாகம் தரப்பில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறக்கை வெளியிட்டது. இதையடுத்து 38 நாட்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
ஆனால், ஆலை நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வந்தது. 2025 ஜனவரி 4 -ந்தேதி சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரன், மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 13 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மொத்தம் 27 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், தொழிற்சங்கத்தில் இருந்து விலகுவதாக மிரட்டி சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர் களிடம் நிறுவனம் தரப்பில், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், தொழிலாளர்கள் பாதிப்பு குறித்து, தங்களை தொழிலாளர்கள் கட்சி என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டு கட்சிகள் முன்வரவில்லை, அரசும் முன்வரவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, மாநிலச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொழிலாளர்கள் பேரணியாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!