சென்னை:  தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,   அதிமுக பூத் ஏஜெண்டுகளுகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என   அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குகள் போன்றவைகளை சரிபார்த்து உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை. தற்போது SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

உண்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை வந்தால், தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், நம் மீது அவதூறு பரப்பி வருகிறார். கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொரு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) முறையாக இந்த பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஆளும் திமுகவுக்கு ஆதரவாக இந்த அலுவலர்கள் செயல்படும் பட்சத்தில் அதை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திமுகவினர் தேர்தல் நேரத்தில் எப்படி உள்ளடி வேலைகள் செய்வார்களோ, அதுபோல் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் போது சில வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் இணைந்து சில முறைகேடுகளை செய்வதாக செய்திகள் வருகின்றன.  இதை விழிப்புடன் செயல்பட்டு முறியடிக்க வேண்டும்.

நமது கழகத்தின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களாக பணியாற்றுபவர்கள் (BLA-2) அனைத்து வீடுகளுக்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) திரும்ப ஒப்படைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உண்மையான வாக்காளர்கள் விடுபடாமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கழக வாக்குச்சாவடி முகவர்கள் இப்பணிகளை முறையாக செய்கிறார்களா? என்பதை நமது மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு கூறியுள்ளார்.