பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி  அமோக முன்னிலையில் உள்ள நிலையில், அரசியல் சாணக்கியன் என்று கூறிக்கொள்ளும்  பிரசாந்த் கிஷோர்-ன் ஜன்சுராஷ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடத்திலும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அரசியல் சாணக்கியன் இன்று அரசியல் அனாதையாகி உள்ளார். பீகார் மக்கள் அவரது கட்சியை அனாதையாக்கி உள்ளனர்.

நிதிஷ்குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட்டால், நான் அரசியலை விட்டே செல்கிறேன் என்ற பிரசாந்த் கிஷோரை  இன்று பீகார் மக்களே  அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமான பீகாரில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில்,  பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் (தே.ஜ.கூ), ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணியிலும் களம் கண்டன. மேலும் அரசியல் சாணக்கியன் பிரசாந்த்கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் களமிறங்கினார்.

தாங்களே வெற்றி பெறுவோம் என்றும், தனது  கட்சி கிட்டத்தட்ட 28 சதவீதம் ஓட்டுகளை பெறும் என்றவர்,  கடந்த தேர்தலில் தேஜ கூட்டணியும், இண்டி கூட்டணியும் பெற்ற ஓட்டு சதவீதம் என்பது 72 சதவீதம் மட்டுமே. பாக்கி உள்ள 28 சதவீதம் ஓட்டுகளும் இம்முறை எங்களுக்குத்தான் என கூறினார்.

ஆனால், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், அவரது கட்சியில் ஒரு இடத்தில்கூட முன்னணியில் வரவில்லை என்பது, அவருக்கும், அவரது கட்சியினருக்கும் பெரும்  சோகத்தை எற்படுத்தி உள்ளது.

தற்போதைய நிலவரபபடி,  பீகாரில் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆனால், அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.  மகாகத்பந்தன் கூட்டணியின்  முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வெற்றிகூட கேள்விக்குறியாகி உள்ளது.

மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக வேண்டும் என்றால் 122 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மதியம் 2மணி நிலவரப்படி,  தே.ஜ. கூட்டணி 192 இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. மகாகத்பந்தன் 46 இடங்களுடன் பெருமளவு பின் தங்கியுள்ளது.  காங்கிரஸ் கட்சி வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

வடக்கன்கள் என இழிவாக பேசப்பட்ட பீகாரிகள், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான  மகாபந்தன்  கூட்டணியின் தேர்தல் உறுதிமொழியை ஏற்க மறுத்து வாக்களித்துள்ளனர். ஆர்ஜேடி தலைவல் தேஜஸ்வி யாதவ்,  “ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு வேலை + மாதம் ரூ.10,000 இலவசம்” என்ற மிகப்பெரிய கவர்ந்திழுக்கும் வாக்குறுதியை கொடுத்த நிலையில்,  படிப்பறிவற்ற, இலவசத்துக்கு மயங்கிய பீகாரிகள், தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று மகாபந்தன் கூட்டணி நம்பிய நிலையில், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி உள்ளது. அவர்களின் நம்பிக்கை பொய்த்துபோனது.