பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தில் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் சர்ச்சையைத் தொடர்ந்து, தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவுகள் ஆகி வியப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகாரில் வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில் வெளியாகி உள்ள எக்சிட் போல் முடிவுகளில், பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சியை தக்கவைக்கும் என வெளியாகி உள்ளன.

243 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட பீகார் மாநிலத்தில் இரண்டு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 6ஆம் தேதி, 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 65.08% வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் பீகார் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 68.52 சதவீத வாக்குகள் தற்போது பதிவாகியுள்ளன.
பீகார் தேர்தலை பொறுத்தவரை, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமார் கட்சி) – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், தேஜஸ்வி தலைமையிலான ஆர்ஜேடி – காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையேதான் தற்போது போட்டி நிலவியது. முன்னதாக, கடந்த தேர்தலில் ஐக்கிய ஜனாதளமும், ஆர்ஜேடியும் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், அதை நிலைக்கவில்லை. இதையடுத்து நிதிஷ்குமார் மீண்டும் என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி, அதன்மூலம் ஏராளமான வேட்பாளர்களை களமிறக்கி, தாங்களே ஆட்சியை பிடிப்போம் என கூறி தேர்தல் போட்டியிட்டார். ஆனால், அவர் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.
இந்த நிலையில், அங்கு நேற்று மாலை தேர்தல் முடிவடைந்ததுமே எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பல முன்னணி ஊடகங்களும், செய்தி நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
பீகாரில் ஆட்சியை பிடிக்க குறைந்தபட்சம் 121 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்படி இருக்கையில், நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணியே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்து கணிப்புகள்தெரிவிக்கின்றன. அதேவேளையில், ஒரு கருத்துக்கணிப்பு ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணியான மகாபந்தன் ஆட்சியை கைப்பற்றும் என குறிப்பிட்டுள்ளது.
‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ ஊடகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 133 – 159 தொகுதிகளையும், ஆர்ஜேடி – காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி 75 – 101 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. ஜன் சுராஜ் 5 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவி தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில், என்டிஏ கூட்டணி 145 – 160 தொகுதிகளிலும், மகா கூட்டணி 73 – 91 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 3 தொகுதிகளை வரை கைப்பற்றும் எனக் கணித்துள்ளது. பிற கட்சிகள் 5 முதல் 7 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.
MATRIZE நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி 147 – 167 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி 70 -90 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கணித்துள்ளது.
டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 142 – 145 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணிக்கு 88 முதல் 91 தொகுதிகள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, முதற்கட்ட தேர்தலில் (121 தொகுதிகள்) ஆளும் என்டிஏ கூட்டணிக்கு 60 – 70 தொகுதிகளும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு 45 – 55 தொகுதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைனிக் பாஸ்கர் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், ஆளும் என்டிஏ கூட்டணி 145 முதல் 160 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. மகா கூட்டணி 73 முதல் 91 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3 தொகுதிகள் வரையிலும், பிற கட்சிகள் 5 முதல் 7 தொகுதிகள் வரையிலும் வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
JVC’S POLL நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில், என்.டி.ஏ. கூட்டணி 135-150, இந்தியா கூட்டணி 88-103, சன் சுராஜ் 0-1, மற்றவை 3-6 என தெரிவித்துள்ளது.
