டெல்லி: தலைநகர்  டெல்லி செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை திடீரென கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 10 பேர் பலியான நிலை யில், விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சந்தே நபரின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். கார் வெடிப்பை நிகழ்ச்சியதாக சந்தேகிக்கப்படும் நபர்,  தற்கொலை படையைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது என்பது தெரிய வந்துள்ளது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த  4 நாட்களில் 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரசாயனங்கள், துப்பாக்கிகளுடன், ரிசின் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மக்களை காக்க வேண்டிய மருத்துவர்களே, மக்களை கொலை செய்யும் குண்டுவெடிப்பு போன்ற நாசகார செயல்களுக்கு உதவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில்  10 பேர் பலியாகியுள்ள நிலையில், 20 பேர் பலத்த காயமடைந்தனர்.   இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கார் வெடிப்பு சம்பவத்தை டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கார் வெடித்த விபத்தில் சந்தேகிக்கப்படும் முதல் நபரின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

கார் வெடிப்பு நடத்திய நபர்,  அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்து வரும் உமர் முகமது  என்பது தெரிய வந்துள்ளது. இவர்  மனித வெடிகுண்டாக செயல்பட்டு, இந்த கார் குண்டு வெடிப்பை   ஏற்படுத்தி இருக்கிறார் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

முன்னதாக பயங்கரவாத அமைப்புகளுடன் இருந்த  டாக்டர் அதீல் அகமது ராதர் மற்றும் டாக்டர் முஜம்மில் ஷகில் ஆகிய இருவரும் நேற்று முன்தினம்  (நவம்பர் 9ந்தேதி)  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கார் குண்டுவெடிப்பை நடத்திய தற்கொலை படையைச் சேர்நத் உமர் முகது, இவர்களுடைய  உதவியாளர்  என்பது தெரிய வந்தது.

முன்னதாக நாசகார வேலையில் ஈடுபட தயாராக இருந்த இரண்டு மருத்துவர்களும் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட அன்றே அவர்களிடம் இருந்து , 2,900 கிலோ வெடி மருந்துகள் (டெட்டனேட்டர்)  பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பீதி அடைந்த உமர் முகமது, மனித வெடிகுண்டாக செயல்பட்டு, குண்டு வெடிப்பை நடத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உமர் முகமதுவும், அவரது கூட்டாளிகளும் தாக்குதலை நடத்துவதற்கு அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயை (ANFO) பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அவர்கள் காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து, செங்கோட்டை அருகே நெரிசலான பகுதியில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 கார் (HR 26CE7674) பதர்பூர் எல்லையில் இருந்து டெல்லிக்குள் நுழைவதை சிசிடிவி வீடியோ தெளிவாக காட்டுகிறது. இந்த கார் அவுட்டர் ரிங் ரோடு வழியாக பழைய டெல்லிக்கு வந்தது. செங்கோட்டைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்தத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டது. அதாவது பிற்பகல் 3:19 மணிக்கு உள்ளே நுழைந்த கார், மாலை 6:30 மணியளவில் தான் புறப்பட்ட சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த 3 மணி நேரத்தில் காரை ஓட்டி வந்தவர், ஒரு நிமிடம் கூட கீழே இறங்கவில்லை என்பது காவல் துறைக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

நேற்று தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார், பலமுறை பல பேரிடம் கைமாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த காரை சல்மான் என்பவர் கடந்த மார்ச் மாதத்தில் தேவேந்தருக்கு விற்றுள்ளார். பின்னர் அக்டோபர் 29 ஆம் தேதியன்று, தேவேந்தரிடமிருந்து அமீருக்கும், பின்னர் தாரிக் மற்றும் உமருக்கும் என கார் பலமுறை கைமாறி இருப்பது போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இந்நிலையில் அமீர் மற்றும் தாரிக் ஆகிய இருவரையும் டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது. உமர் முகமதுவின் சகோதரர் தான் அமீர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவரான அதீல் அகமது ராத்தரும் ஒருவர்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி: செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடல்