தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) என்பது, வாக்காளர் மோசடியை மறைத்து அதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டினார்.
மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஹரியானாவில் வாக்கு மோசடி நடந்துள்ளதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அங்குச் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதேபோன்ற வாக்காளர் பட்டியல் மோசடிகள் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரிலும் நடந்துள்ளது” என்றார்.

இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அமைத்த ஒரு திட்டம், “வாக்கு மோசடி ஒரு பெரிய பிரச்சினை; இப்போது அதை மறைக்க SIR பயன்படுத்தப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
“பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தியானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்தையே பாதிக்கும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இது அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தையே சீர்குலைக்கிறது,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
அதேவேளையில் வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது என்பது தொடர்பான விளக்கப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. அதில் :

முதல் கட்டம் — வாக்காளர் தகுதி நீக்கம் (SIR மூலம்)
“சிறப்பு விரிவான திருத்தம்” என்ற பெயரில் ஆயிரக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள்.
உதாரணம்:
10,000 வாக்காளர்களில் 1,000 பேர் நீக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம்.
அதில் பெரும்பாலோர் “A” கட்சியின் ஆதரவாளர்கள்.
அதனால் பட்டியலில் 9,000 பேர் மட்டுமே மீதமிருப்பார்கள்.
இரண்டாம் கட்டம் — போலி வாக்காளர்கள் சேர்த்தல்
பின்னர் போலி முகவரி மற்றும் போலி அடையாள அட்டைகள் உருவாக்கி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
சில சமயங்களில் ஒரே நபரின் புகைப்படம் பல வாக்காளர் பெயர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் எப்படி பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று.
உதாரணம்:
2,000 போலி பெயர்கள் சேர்க்கப்பட்டால் மொத்தம் 11,000 வாக்காளர்கள் ஆகின்றனர்.
மூன்றாம் கட்டம் — போலி வாக்குகள் சேர்க்கை
தேர்தல் நாளில் உண்மையான 6,000 பேர் மட்டுமே வாக்களிப்பதால் அன்றைய நாளில் தேர்தல் ஆணையம் அதை 54.5% (11,000 இல் 6,000) வாக்குப்பதிவு என்றும் ஓரிரு நாளில் திருத்தப்பட்ட வாக்கு சதவீதம் என்று உயர்த்தியும் அறிவிக்கிறது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு, 2,000 போலி வாக்காளர்களின் வாக்குகள் B கட்சிக்கு சேர்க்கப்படுகின்றன. இதனால் மொத்த வாக்குகள் 8,000 ஆகின்றன.
அதனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வாக்குப்பதிவு 72% (8,000/11,000) ஆக மாறுகிறது.
வாக்குஎண்ணும் நாளில்,
B கட்சி — 4,500 வாக்குகள்
A கட்சி — 3,500 வாக்குகள்
முடிவில், B கட்சி 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
ஆனால் உண்மையில்:
B: 4,500 – 2,000 (போலி) = 2,500
A: 3,500 + 900 (தகுதி நீக்கம்) = 4,400
A கட்சி தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும்!
ஆனால் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தேர்தல் ஆணையம் வாய்திறப்பதில்லை திறந்தாலும் மழுப்பலான பதிலை மட்டுமே தருகிறது.

“CCTV காட்சிகள் மற்றும் VVPAT பதிவுகள் வெளிப்படுத்தப்பட்டால், அந்த 2,000 போலி வாக்காளர்கள் ஒருபோதும் வாக்களிக்க வரவில்லை என்பதை நிரூபிக்க முடியும்.
ஆனால் தேர்தல் ஆணையம் “அதில் பெண்கள் இருப்பார்கள் அவர்கள் நம் சகோதரிகள் அதை பொது வேளியில் பகிர முடியாது” என்று சாக்குப்போக்குகள் கூறி காட்சிகளை வெளியிடுவதில்லை என்று சமூக வலைதளப் பதிவில் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதமாக பீகாரில் கடந்த 6ம் தேதி கட்ட தேர்தலில் பதிவான ஆண் மற்றும் பெண் வாக்குகளின் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆர்.ஜெ.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், VVPAT சீட்டுகள் தெருவில் சிதறிக் கிடந்தது எப்படி ? என்றும் CCTV கேமராக்கள் ஏன் அணைக்கப்பட்டது ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதற்கான பதில் மேலிடத்தில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு இன்னும் கிடைக்கவில்லையா ? என்றும் விமர்சித்துள்ளார்.