அமெரிக்காவில் அரசு முடக்கம் (shutdown) ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இதன் காரணமாக அரசின் உணவு உதவி திட்டமான SNAP (Supplemental Nutrition Assistance Program) மூலமாக வழங்கப்படும் உணவு சலுகைகள் தாமதமாகியுள்ளன.
டிரம்ப் நிர்வாகம் “இப்போதைக்கு SNAP சலுகைகளின் முழுத் தொகையை உடனே வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நவம்பர் மாத உணவு சலுகைகளை வழங்க அமெரிக்காவின் சில மாநிலங்களுக்கு அவசர நிதி மற்றும் பிற நிதிகளைப் பயன்படுத்த கீழ்நீதிமன்றங்கள் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்துள்ள தற்காலிக நிவாரணமாகக் கருதப்படுகிறது.

இருந்தபோதும் இந்த இடைக்கால தடை காரணமாக, நாடு முழுவதும் உணவு முத்திரைகள் (food stamps) மூலம் உணவு பெறும் சுமார் 42 மில்லியன் பேருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நீதித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “இது ஒரு நிதி பற்றாக்குறை பிரச்சனை. இதை தீர்க்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கே உண்டு; நீதிமன்றம் தலையிடக்கூடாது.” என்று கூறினர்.
“குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு மே மாதம் வரை தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதற்குள் அரசாங்கம் புதிய நிதி ஒதுக்க முடியும். இருந்தபோதும், குழந்தைத் திட்டங்களுக்கான நிதியைப் பயன்படுத்தாமல் இருப்பது நியாயமல்ல” என்று நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், “இந்த நிதியை பயன்படுத்த மறுப்பதால், பல குடும்பங்கள் உடனடியாக உணவு உதவியை இழக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.
நீதிமன்றங்களின் குழப்பமான தீர்ப்பால் வறுமைக் கோட்டிற்கு கீழ் குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் பலரும் உணவு சலுகைகளைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.