பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56  இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத் துறையில் 50ஆண்டுகள்,  அதாவது பொன்விழா ஆண்டுகளை  நிறைவுசெய்துள்ளதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட உள்ளது.

 ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவாகும்.  இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று.  இந்த விழாவில், இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. 

இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.

இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அத்துடன் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கனவே  2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) ரஜினிகாந்த் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி விருது”  வழங்கப்பட்டது.  இந்த விருதை அமிதாப் பச்சன், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோருடன் இணைந்து வழங்கினார். இந்த விழாவின் பொன் விழாவைக் குறிக்கும் வகையில், முதல் முறை. இந்த குறிப்பிட்ட விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ரஜினியின் 50ஆண்டு திரைப்பட விழாவை கவுரவிக்கும் வகையில் கவுரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.