சென்னை: நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாகப் பேச பா.ஜ.க-தான் என்னை அழைத்தது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 30ந்தேதி அன்று பசும்பொன் தேவர் ஜெயந்தியின்போது, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைந்து மரியாதை செய்ததுடன், எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டும், பிரிந்திருப்பவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும், அமைதியாக இருப்பவர்கள் இணைக்கப்பட வேண்டும், அப்படி வருகிற போது தான் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கனவை தமிழகத்தில் மீண்டும் உருவாக்க ஏதுவாக இருக்கும் என்ற கருத்தை நான் வெளியிட்டேன். அதற்குப் பிறகு, அ.தி.மு.க-வில் இருந்து விலக்கப்பட்டேன்.
ஆனால், ஜெயலலிதா காலத்தில், 2009-ல் இன்றைய பொதுச் செயலாளர் அ.தி.மு.க-வில் அனைத்து பொறுப்பில் இருந்தும் விலக்கினார்கள். அதேபோல, 2012-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது என்னையும் அ.தி.மு.க-விலிருந்து விலக்கினார்கள். ஆனால் அதற்குப் பிறகு, ஜெயலலிதா சுற்றி இருக்கிற யாரையும் விலக்கவில்லை. அவர் அனைவரையும் அரவணைத்துச்சென்ற வரலாறு இருக்கிறது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை, யாராவது என்னிடத்தில் பேசினாலும் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர்.
இது இயக்கத்தை பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, தன்னைச் சுற்றி இருக்கிறவர்களை பலவீனப்படுத்துகிறபோது அதை யார் செய்கிறார்களோ அவர்களும் பலவீனம் அடைகிறார்கள் இதுதான் வரலாறு” என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “கருணாகரன் என்ற பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க-வைச் சேர்ந்தவர் அவருடைய மருமகளுக்கும் அங்கே பணியாற்றுகிறவருக்கும் ஏற்பட்ட நிலையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதற்கு சி.பி.ஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தினோம். இதற்கெல்லாம் சி.பி.ஐ விசாரணை தேவை என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறபோது, கோடநாட்டில் நடந்த கொலைகளைப் பற்றி இதுவரையிலும் குரல் கொடுக்கப்பட்டி ருக்கிறதா? எதற்கெடுத்தாலும் சி.பி.ஐ விசாரணை கேட்கும் போது ஜெயலலிதாவின் கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளைக்கு ஒரு நாளாவது சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
என்னை ‘பி’ டீ என்று சொன்னார்கள் யார் ‘பி’ டீமாக இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், “நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது. தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. இ.பி.எஸ் முதலமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாகப் பேசினார்.
கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டுப் பணக்காரர்களுக்குச் சீட் வழங்கினார். அ.தி.மு.க-வை பாதுகாத்த பா.ஜ.க-வை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார்.” என்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டினார்.
“அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாகப் பேச பா.ஜ.க-தான் என்னை அழைத்தது. பா.ஜ.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன்; என்னை வைத்து அ.தி.மு.க-வை உடைக்க பா.ஜ.க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை” என்று விளக்கம் அளித்த செங்கோட்டையன், தற்போது அது என்ன ஆனது என உங்களுக்குத் தெரியும். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும்; பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யலாம் எனக் கனவு கண்டால் இதுபோன்று நிலைதான் ஏற்படும்.” என்று சாடினார்.
“இ.பி.எஸ் மகன், மாப்பிள்ளை குடும்பத்தினர்தான் அ.தி.மு.க-வை நடத்துகின்றனர். சட்டமன்றத்தில் இ.பி.எஸ்-க்கு பின்னால் தான் அமர்ந்திருந்தேன். ஒருமுறை கூட என்ன குறை என்று இ.பி.எஸ் கேட்டதில்லை”.
இவ்வாறு கூறினார்.