நெல்லை : விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார், அவர் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்பதே தெரியவில்லை என்றும், “நானும் ரவுடிதான் என வடிவேலு சொன்னது போல திருவேங்கடவினர் பேசி வருகின்றனர் என சபாநாயகர் அப்பாவு காட்டமாக விமர்சித்துள்ளார்.

தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்ததுடன், அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், தவெக வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என கூறியிருந்தார். இது திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் ‘உங்களுடன் ஸ்டாலின் ‘திட்டத்தில் மனுக்கள் பெறுவதை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார். பின்னர், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “விஜய் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்றே தெரியவில்லை அதை அவரிடமே கேட்டு சொல்லுங்கள் என கடுமையாக சாடினார்.
கரூர் விவகாரத்தில் முதலமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் என்று சாடியதுடன், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் கரூர் நெரிசலில் 41 பேர் இறந்தபோது துண்டை காணோம், துணியை காணோம் என ஓடியவர் விஜய் என்றும், விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார் என்று விமர்சித்ததுடன், முதலமைச்சரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
மஹாராஷ்டிர கவர்னர் ராதாகிருஷ்ணன்போல் ஒரு கவர்னர் இருந்தால் எந்த பிரச்னையும் வராது. தமிழக கவர்னர் தற்போது தமிழக சுகாதாரத்துறையை பாராட்டி உண்மையை சொல்லியுள்ளார். இதனை கண்டுபிடிக்க அவருக்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுவதால் தான் பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே தெரியாமல் ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசினார். யார் வசனம் எழுதி கொடுத்து இவர் வாசிக்கிறார் என்பது புரியவில்லை.
இவ்வாறு கூறினார்.