2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வெவ்வேறு பெயர்களுடன் பல முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அது தேர்தல் முடிவைப் பாதித்ததாகவும் ராகுல் காந்தி இன்று குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் இந்த ஹைட்ரஜன் குண்டு வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நாளில் காங்கிரஸ் முகவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று சால்ஜாப்பு கூறியுள்ளது.
“தி எச் ஃபைல்ஸ்” என்ற தலைப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஹரியானா தேர்தல் முடிவைப் பாதிக்கும் ஒரு திட்டத்தை தேர்தல் ஆணையம் அனுமதித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

“காங்கிரசின் மகத்தான வெற்றியை தோல்வியாக மாற்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் Gen Z, இளம் தலைமுறையினர், இளைஞர்கள் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது.
தேர்தல் ஆணையத்தையும் இந்தியாவில் ஜனநாயக செயல்முறை குறித்தும் 100% ஆதாரத்துடன் கேள்வி எழுப்புகிறேன்” என்று ராகுல் காந்தி கூறினார்.
பிரேசிலிய மாடலின் படத்தைக் காட்டிய ராகுல் காந்தி “இந்தப் பெண்மணி யார்? அவள் பெயர் என்ன? அவர் எங்கிருந்து வருகிறார்? ஆனால் அவர் ஹரியானாவில் 10 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் 22 முறை வாக்களித்துள்ளார்,
மேலும், சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ரஷ்மி, வில்மா… என பல பெயர்களைக் கொண்டிருக்கிறார்.
உண்மையில் அவர் ஒரு பிரேசிலிய மாடல்” என்று அவர் கூறினார்.
“மேதியஸ் ஃபெரெரோ” என்ற பெயருடன் கூடிய அந்த புகைப்படத்தில் உள்ள கியூ ஆர் கோட் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மேதியஸ் ஃபெரெரோ என்ற புகைப்படக் கலைஞரின் பக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.
அந்தப் புகைப்படக் கலைஞரின் பக்கத்தில் ராகுல் காந்தி காட்டிய மாடலின் புகைப்படம் உள்ளது.
ஹரியானாவில் சுமார் இரண்டு கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், 25 லட்சம் பதிவுகள் செல்லாதவை என்றும் காந்தி குற்றம் சாட்டினார். “அதாவது ஒவ்வொரு எட்டு வாக்காளர்களில் ஒருவர் போலி – 12.5%. இதில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள், 93,174 செல்லாத வாக்காளர்கள் மற்றும் 19.26 லட்சம் மொத்த வாக்காளர்கள் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் சுமார் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும், “223 வாக்காளர் அட்டையில் ஒரே புகைப்படம் பயன்படுத்தப்பட்ட்டுள்ளதாகவும்” ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.