கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை சுட்டு பிடித்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக இந்த கொடூரமான சம்பவத்தை கண்டித்து,  அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடியதுடன், நேற்றே பாஜகவினர்   தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் சம்பவம் நடைபெற்ற பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பாரை அடித்துநொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பிறகே,  பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரையும் நள்ளிரவில் சுட்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதுவும், இருட்டாக காணப்படும், அந்த  வனப்பகுதியில் போலிசிர் எப்படி  சரியாக காலில் சுட்டு பிடித்தனர், என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிம் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவாளிகள் மீதான துப்பாக்கி சூடு  தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர்,  நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையம் அருகே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அவர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய முயன்றபோது, போலீசாரை தாக்கி தப்ப முயன்றனர். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்களில் சுட்டனர். அதில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி எனும் சதீஷ் இருவருக்கு தலா இரண்டு புல்லட்டுகளும் தவசிக்கு ஒரு புல்லட்டும் பாய்ந்து காயம் ஏற்பட்டது. பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), அவரது தம்பி காளீஸ்வரன் (21) மற்றும் உறவினர் தவசி (20) என தெரியவந்தது. மூவரும் 10 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இருகூரில் தங்கி கட்டிடப்பணி மற்றும் மரம் வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது முன்னதாகவே கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் நடந்த இரவு மூவரும் இருகூரில் மது அருந்திய பின்னர் மீண்டும் மது வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். ஆண் நண்பரை அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கி, காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

இதுதொடர்பாக, போலீசார்  சுமார்  300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.  அப்போதுதான் தெரிந்தது  பல இடங்களில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. பொதுமக்களும் அதனை கவனிக்க வேண்டும். சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர்.

இவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் முன்பு எந்தவித தொடர்பும் இல்லையெனவும், திட்டமிட்டு தாக்கியதல்ல எனவும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள்மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 7 தனி படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அறிவியல் ரீதியான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டி உள்ளது. அதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்களை வெளியிட முடியாது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை சீராக உள்ளார். அவருக்கு உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளது. தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்கக்கூடாது என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் சிறு புதரை தாண்டி இருந்ததால் கண்டறிய தாமதமாகிவிட்டது. சம்பவம் நடந்த இடம் யாருடையது என்பது குறித்து வருவாய்த்துறையினருடன் ஆலோசித்து வருகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் காவலன் ஆப் அறிமுகம் செய்தார். அது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இது போன்ற அவசர நேரங்களில் அதனை பயன்படுத்த வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தனிநபர் கருத்துக்களை பதிவிட வேண்டாம். சம்பவ இடத்தில் ஆயுதங்கள் இருந்ததால் போலீசார் பயந்துவிட்டதாக கூறுவது தவறானது. பாஜகவினர் அனுமதியின்றி தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தியது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.