சென்னை: முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன். இவர் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது மட்டுமின்றி, திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருந்த மறைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சி மோதல் காரணமாக, பலர் திமுகவுக்கு சென்றுகொண்டிருப்பதுடன், திமுகவில் சேரும் மனநிலையிலும் உள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், திமுக தலைவரை சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் அடுத்ததாகவும் திமுக ஆட்சிதான் அமையும் என பேசியது, அவர் திமுகவில் விரைவில் இணைவார் என்பதை சூசகமாக சுட்டிக்காட்டியது.
அதுபோல, சமீபத்தில் ஒபிஎஸ், டிடிவியுடன் இணைந்து, செங்கோட்டையனும், (கோபி தொகுதி அதிமுக எம்எல்ஏ) அதிமுகவுக்கு எதிராக களமிறங்கிய நிலையில், எடப்பாடியை வீழ்த்துவது வரை ஓயமாட்டோம் என்று சூளுரைத்தனர். இவர்களும் திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த பரபரப்பு மத்தியில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான அதிமுக MLA மனோஜ் பாண்டியன் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியின்போது, முதல்வர் ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நேரு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிம் பேசிய மனோஜ் பாண்டியன் , திராவிடக்கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராகவும், தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் திமுகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று மாலை 4 மணிக்கு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் உள்பட அவரது ஆதரவாளர்கள் விரைவில் திமுகவில் இணைவதற்கு முன்னோடியாக மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.