சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலையில், தமிழ்நாடு அரசு டெட் தேர்வை அறிவித்தது. அதன்படி, இநத் தேர்வு எழுத 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்
இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ஆகியவற்றுக்கான தேர்வு 15.11.2025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று (03.11.2025 ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் TNTET 2025 சிறப்பு முகாமானது 04.11.2025 முதல் 10.11.2025 வரை (வேலை நாட்களில்) செயல்படும்.
நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இச்சிறப்பு முகாம் அலுவலர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும் https://trb1.ucanapply.com/login என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆசிரியர் சங்கங்களும் தமிழ்நாடு அரசும் மேல்முறையீடு செய்வதற்கு ஆலோசனை செய்து வருகிறது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு செப்டம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. மேலும் இந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வு தாள் ஒன்றிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். தாள் ஒன்றுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 15ம் தேதியும், தாள் இரண்டுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 16 அன்றும் நடைபெறும்.
இவர்களுக்கான தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தேர்வு நேரத்தில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுக்கான விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும்” என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.