சென்னை; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்எல்ஏவுமான செங்கோட்டையன்,  இரட்டை இலையை முடக்கும் நோக்கில் எடப்பாடி தலைமை யிலான அதிமுகவுக்கு எதிராக  களமிறங்கி உள்ளர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும்  தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதில் முக்கியமானது, அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை.  அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே அதிமுகவின் அதிகாரப்பூர்வமாக சின்னமாக இரட்டை இலை இருந்து வருகிறது.. இந்த சின்னத்துக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியது. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி போட்டியால்,  இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, மீண்டும் அதிமுகவுக்கு கிடைத்தது. பின்னர் ஜெ.மறைவுக்கு பிறகு நடைபெற்ற ஆர்கே.நகர் தேர்தலிலும் இரட்டை இலை முடக்கப்பட்டது. அப்போது, தனது கிடைக்க வேண்டும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் களமிறங்கியது, அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைத்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், இரட்டை இலை எனக்கே என போர்க்கொடி தூக்கி, வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதிமுகவில் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி இருப்பதால், தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி தலைமையிலான அதிமுகவிடமே உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், எடப்பாடி மீதான அதிருப்தியில்இருந்து வந்த செங்கோட்டையன்,  ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து, அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால், செங்கோட்டையை எடப்பாடி கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு, உண்மையான அதிமுக அல்ல. அதிமுக கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க அவகாசம் தேவை.” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும்  சிக்கல் எழுந்துள்ளது,