தருமபுரி : திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள தர்மபுரி வந்த முதல்வர் ஸ்டாலின் அங்க  கட்டப்பட்டு வரும், தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகளை  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்திற்கு  நேற்று  (3.11.2025) வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வருகை தந்தார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ.மணி அவர்களின் இல்லத் திருமண விழாவில்  பங்கேற்று விழாவை நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அமைச்சர்கள் ஏ.வ.வேலு, MRK.பன்னீர்செல்வம்,  சிவசங்கர்,  ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட கழகச் செயலாளர்கள் — கிருஷ்ணகிரி மேற்கு ஒய்.பிரகாஷ், கிழக்கு டி.மதியழகன், தருமபுரி மேற்கு பி.பழனியப்பன் ஆகியோரும், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் தடங்கம் பி.சுப்பிரமணி (முன்னாள் எம்எல்ஏ), முன்னாள் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.தர்மசெல்வன் ஆகியோரும் பங்கேற்றனர். அத்துடன் மாநிலத் துணைச் செயலாளர் மருத்துவர்_கே_தருண் அவர்களும் விழாவில் கலந்து கொண்டார். அதோடு, ஒன்றிய கழகச் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்.‘

திருமண விழா முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின்  தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம்

தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ. ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவில் 39.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வரும் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இப்புதிய பேருந்து நிலையத்தில் தற்போது தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், உணவகங்கள், ATM மையம், பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, கழிவறைகள், நேரக் காப்பாளர் அறை, தாய்மார்கள் பாலுட்டும் அறை, மேற்கூரை அமைக்கும் பணிகள், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வு அறைகள், 55 எண்ணிக்கையிலான பேருந்து நிறுத்தும் இடம், நடைபாதை, பயணிகள் அமரும் இடத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள், பிரதான சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா

தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அங்கு நடைபெற்று வரும் அலுவலகக் கட்டடம், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இப்பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தருமபுரி – ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
தருமபுரி வட்டம், அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 1,733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி 4.11.2024 அன்று பெறப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 17.8.2025 அன்று தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

இத்தொழிற் பூங்காவில் உட்புறசாலைகள், மழைநீர் வடிகால், தெருவிளக்கு, நீர் விநியோகம் போன்ற உட்கட்டமைப்பு மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள மொத்தம் 937.36 கோடி ரூபாய் நிதி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொழிற் பூங்காவில் 1.35 கி.மீ நீள அணுகு சாலைக்கான பணி முழுவதும் 14.04 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளதுடன், பூங்காவினையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை 44-ன் சேவைச் சாலையை 5.42 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அகலப்படுத்த பணி ஆணை வழங்கப்பட்டு, இப்பணி மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

மேலும், முதற்கட்டமாக 200 ஏக்கர் நிலப்பரப்பில் மழைநீர் வடிகால், சிறுபாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 103.08 கோடி ரூபாய் திட்ட நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் முதற்கட்டமாக 66.70 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் ஜூன் 2026-ல் முடிக்கப்படும்.

இதுவரை, இத்தொழிற் பூங்காவில் 9 தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் 40.91 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தொழிற் பூங்காவின் விரிவாக்கத்திற்காக (நிலை -II க்காக), தருமபுரி வட்டம், அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 690 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, அதில் 132 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்த அரசின் நிருவாக அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து தற்போது நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் 558 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினை சிப்காட் நிறுவனம் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா முழு செயல்பாட்டிற்கு வரும்பொழுது, தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய தொழிற்பூங்காக்களில் ஒன்றாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தொழிற்பூங்காவில் பேட்டரி மற்றும் மின்வாகனங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.