நடிகர் அஜித் குமார், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற ஆங்கில யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி நேற்றிரவு வெளியானது.
இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் வைரலானதுடன் தற்போது வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு 2026 ஜனவரியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலைக்கு உயர தனது மனைவி ஷாலினியின் புரிதலும் ஒத்துழைப்பு மட்டுமே காரணம் என்று கூறியுள்ள அஜித் தனது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் இருவரும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.
குடும்பத்துடன் எங்கும் செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அங்கு ரசிகர்கள் கூடிவிடுவதால் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது கூட முடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
33 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்கும் அஜித் இதுவரை 29 அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அதில் பெரும்பாலும் கார் ரேஸின் போது ஏற்பட்ட விபத்துகளே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கார் பந்தயத்தில் ஈடுபடும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆனால் நான் நடிகன் என்பதால் அது பெரிதும் பேசப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த ஒரு நபரையே (விஜய்-யின் பெயரைக் குறிப்பிடாமல்) பொறுப்பாக்க முடியாது என்றும் இதில் அனைவருக்கும் பொறுப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புகழ் என்பது இரு பக்க கூர்மையான வாள், திரைப்படத் துறை வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை வாரி வழங்கும். ஆனால், முக்கியமான விஷயங்களைப் பறித்துவிடும் என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
கார் ரேசிங், கோயில் தரிசனம், ரைபிள் கிளப் போன்ற தனிப்பட்ட தருணங்களைத் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தில் திட்டமிட்டு பகிர்ந்து, அவர்களுடனான நெருக்கத்தை தொடர்ந்து வரும் அஜித், இப்போது அதே உத்தியை ஆங்கில ஊடகமான ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’ வழியாக உலகளாவிய அளவில் விரிவுபடுத்தியுள்ளார்.
இந்திய சினிமாவை “உலக அரங்கில்” முன்வைக்கும் ஊடகத்தில் வெளியாகியுள்ள இந்த பேட்டி மூலம் அஜித்குமார் தமிழ்நாட்டையும் தாண்டி தனது எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.