சென்னையில் இந்த ஆண்டில் மட்டும் 229 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகிய பிரபலங்களின் வீடுகளுக்கும், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் நேரடியாக டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கே அனுப்பப்படுகிறது.

சமீபத்தில் அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அச்சம் நிலவியது.

அனைத்து மிரட்டல்களும் வெளிநாடுகளில் இருந்து ‘டார்க் வெப்’ வழியாக அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மிரட்டல் அனுப்பியவர்களை அடையாளம் காண போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் சர்வதேச போலீஸாரின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி நடைபெற்று வருகிறது.

தற்போது, சென்னையில் வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நான்கு சிறப்பு அணிகளும், அதற்காக பயிற்சி பெற்ற நான்கு மோப்ப நாய்களும் பணியாற்றி வருகின்றன.

இதுபோன்ற புரளிகள் தின்தோறும் வருவதால் போலீசாரின் உழைப்பு வீணடிக்கப்படுவதோடு சோதனை நடக்கும் இடத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாவதோடு பொதுமக்கள் இடையிலும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.