அமெரிக்காவின் காலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) உலகில் முதல் முறையாக $5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

என்விடியா-வின் பங்கு புதன்கிழமையன்று 4% க்கும் அதிகமாக உயர்ந்து இந்த புதிய வரலாற்றை ஏற்படுத்தியது.

செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் அமெரிக்க பங்குச் சந்தைகள் தூண்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.

வீடியோ கேம் செயலிகள் தயாரிப்பில் இருந்து தொடங்கிய Nvidia, தற்போது செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.

செவ்வாயன்று பங்குகள் 5% வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், கடந்த ஓராண்டில் என்விடியா-வின் மதிப்பு 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், $500 பில்லியன் மதிப்பிலான AI சிப் ஆர்டர்களை எதிர்பார்க்கும் நிலையில், அமெரிக்க அரசாங்கத்திற்காக ஏழு புதிய சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

மேலும், நோக்கியா நிறுவனத்தின் $1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள என்விடியா, அடுத்த தலைமுறை 6G தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கில் இரண்டு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

AI வளர்ச்சியால் தூண்டப்பட்ட அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது பங்குகள் உயர்ந்ததையடுத்து $4 டிரில்லியன் மதிப்பைத் தாண்டியுள்ளன.

AI மீதான அதிகமான முதலீட்டு உற்சாகம் குறித்து நிபுணர்கள் சிலர் எச்சரிக்கைகள் விடுத்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இங்கிலாந்து வங்கி ஆகியவை, AI பங்குகளில் ஏற்படும் அதிக ஆர்வம் உலகளாவிய சந்தைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளன.

இந்நிலையில், Ark Invest நிறுவனத்தின் CEO கேத்தி வூட், “இது ஒரு தொழில்நுட்பப் புரட்சியின் தொடக்கம் மட்டுமே, AI மதிப்பீடுகளில் குறுகிய கால சரிவுகள் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார்.