சென்னை:  சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள  மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில்  நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக  ஏசி மினி பேருந்துகளை இயக்க சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் டென்டர் கோரி உள்ளது.

சென்னையில் இயக்கப்பட்டு மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அருகிலுள்ள முக்கிய பகுதிகளை இணைக்க பயணிகளின் வசதிக்காக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு  சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன மினி பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் விட்டுள்ளது.

இது மெட்ரோ பயணிகளுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம்,   கடைசி மைல் இணைப்புக்காக புத்தம் புதிய ஏசி மினி பேருந்துகளை அறிமுகப்படுத்த CMRL தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த மினி ஏசி பேருந்துகள்  7 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் (விசாலமான ஷேர்-ஆட்டோக்கள் போன்றவை) என்றும்,  தற்போது பயன்பாட்டில் உள்ள  அனைத்து 41 மெட்ரோ நிலையங்களிலிருந்தும் 5 கிமீ சுற்றளவு வரை இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  இந்த பேருந்துகளின் சேவைகள், ரயில்களின் சேவை  நேரங்களுடன் ஒத்திசைக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம்,   சேவையை இயக்குவதற்கான ஆபரேட்டர்கள்/நிறுவனங்களுக்கான டெண்டர்கள்  வெளியிடப்பட்டு உள்ளதாகவும்,   இது, சென்னையில் தடையற்ற, வசதியான மற்றும் மலிவு விலையில் மெட்ரோ பயணத்திற்கான ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை 32 கி.மீட்டருக்கு மெட்ரோ திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது நீல நிறப்பாதை, பச்சை நிறப்பாதை என இரு வழிகளில் 41 நிலையங்களுடன் சென்னை மெட்ரோ விரிவடைந்துள்ளது. மக்கள் மத்தியில் மெட்ரோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். மேலும், 108.9 கி.மீ. தொலைவுக்கு ரயில்களை இயக்கவும், 128 நிலையங்கள் அமைக்கவும் நகரின் பல்வேறு பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.