சென்னை: வருமானத்திற்கும் அதிகாக சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது நவாஸ்கனி எம்.பி, வருமானத்துக்கு அதிகமாக சுமார் 288 விழுக்காடு சொத்து சேர்த்துள்ளதாகவும்,, அதாவது 23 கோடியே 58 லட்சம் ரூபாய் சொத்துகளை குவித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் நவாஸ்கனி மீது சொத்துக்குவிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்., சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில், ராமநாதபுரம் தொகுதியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ் கனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக சி.பி.ஐ-க்கு புகார் அளித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவி, மகனுக்கு சுமார் 19 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 40 கோடியே 62 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு எனக் குறிப்பிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், வருமானத்துக்கு அதிகமாக சுமார் 288 விழுக்காடு, அதாவது 23 கோடியே 58 லட்சம் ரூபாய் சொத்துகளை குவித்துள்ளார்.
இது சம்பந்தமாக விசாரணை நடத்த, சி.பி.ஐ-க்கு புகார் அளித்தும், எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பதால், புகார் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புகார் குறித்து விசாரித்ததில் 2.85 விழுக்காடு அதிகம் மட்டுமே நவாஸ் கனிக்கு சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சில சொத்துக்களை விற்று அவர் வேறு சொத்துக்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, நவாஸ் கனிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தற்போது ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.