இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமான ஜெரோதா (Zerodha), அடுத்த காலாண்டில் கிஃப்ட் சிட்டி (GIFT City) வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத், யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சல் ஒன் (Angel One), ஐ.என்.டி.மனி (INDmoney), எச்.டி.எஃப்சி செக்யூரிட்டீஸ் (HDFC Securities), குவேரா (Kuvera) போன்ற பல நிறுவனங்கள் அமெரிக்க முதலீட்டு சேவையை வழங்கிவரும் நிலையில், ஜெரோதா நிறுவனமும் இதனை வழங்கவுள்ளது.

ஜெரோதா 2020இல் அமெரிக்க பங்குகளில் முதலீட்டுக்கான திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் கோவிட்-19 (COVID-19) மற்றும் பணம் அனுப்பும் விதிமுறைகள் காரணமாக அது தாமதமானது. இப்போது கிஃப்ட் சிட்டி வழியாக அந்த சிக்கல்கள் குறைந்துள்ளன.

கிஃப்ட் சிட்டி (Gujarat International Finance Tec-City) இந்தியாவின் சர்வதேச நிதி மையமாக விளங்குகிறது. இந்தியா ஐ.என்.எக்ஸ் குளோபல் ஆக்சஸ் (India INX Global Access) மற்றும் என்எஸ்இ ஐஎக்ஸ் யூஎஸ் ஸ்டாக்ஸ் (NSE IX US Stocks) ஆகிய இரண்டு தளங்கள் அமெரிக்க பங்கு முதலீட்டை எளிதாக்குகின்றன.

இவை அனைத்தும் சர்வதேச நிதி சேவை மைய ஆணையம் (IFSCA – International Financial Services Centres Authority) என்ற ஒற்றை ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் இயங்குகின்றன.

ஜெரோதா நிறுவனம் கடந்த நிதியாண்டில் முதல் முறையாக வருவாய் மற்றும் லாபத்தில் சரிவை கண்டுள்ளது. FY25 இல் அதன் நிகர லாபம் ரூ.5,500 கோடியில் இருந்து ரூ.4,200 கோடியாக குறைந்தது. வருவாய் ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.8,500 கோடியாகச் சரிந்தது.

கிஃப்ட் சிட்டி வழியாக அமெரிக்க பங்கு முதலீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருவாய் இழப்பில் இருந்து மீளவும், முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கவும் முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.