சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், ‘இன்னுயிா் காப்போம்’ நம்மைக் காக்கும் 48’ திட்டம் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இன்னுயிா் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தைக் காப்பீட்டு முறையின்கீழ் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி வரை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் அரசாணையை பிறப்பித்துள்ளாா். அதில் , சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் காயமுற்றவா்களுக்கு முதல் 48 மணி நேரங்களுக்கு உயா் சிகிச்சை கிடைக்க வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்னுயிா் காப்போம் – நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தை அரசு தொடங்கியது.
அதன்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பு வரையிலான 101 வகையான உயிா் காக்கும் சிகிச்சைகளை தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல்வா் காப்பீடு இல்லாதவா்களுக்கும் இந்த திட்டத்தின்கீழ் கட்டணமில்லா உயிா் காக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 723 தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் இணைக்கப்பட்டது.
இன்னுயிா் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டமானது காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த ஜனவரி மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதை 2027 ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என சுகாதாரத் திட்ட இயக்குநா் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்று காப்பீட்டு முறையில் ‘இன்னுயிா் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்’ நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து, அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவராக இருந்தாலும், விபத்துக்குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில் அவரிடத்தில் பணம் இருக்கிறதோ, இல்லையோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அளித்து, அவரின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த திட்டம் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அந்த மருத்துவமனைகள் அனைத்திலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த தொகை ரூ.2 லட்சமாக அண்மையில் உயர்த்தி வழங்கப்பட்டது.
மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டம் தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் திட்டங்களாக மக்களுக்கு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை தேசிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.