அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ₹34,000 கோடி) நிதி வழங்கும் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மூலம் நடைமுறைப்படுத்தியது.

இந்த திட்டம், நிதி ஆயோக் மற்றும் எல்ஐசி ஆகியோருடன் ஆலோசித்து தயார் செய்யப்பட்டதாகவும், “அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவது” மற்றும் “மற்ற முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது” என்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மே மாத இறுதியில், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி (585 மில்லியன் டாலர்) மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டது. இதனை LIC முழுமையாக வாங்கியது என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சந்தடியில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் வெளிவந்தபோது, “அரசு நிதி தனியார் நிறுவனத்தை பாதுகாக்கப் பயன்படுத்துகிறது” என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் எழுப்பின.

இந்த விவகாரத்தை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் ராகுல் காந்தி. அவர் தனது X (முன்பு ட்விட்டர்) பதிவில்,

“பணம், பாலிசி, பிரீமியம் உங்களுடையது; நன்மை அதானியுடையது!” என்று பதிவிட்டிருந்தார்.

அவரது குற்றச்சாட்டை சிபிஐ(எம்) மற்றும் பிற எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன. அவர்கள் இதை “பொது நிதியின் தவறான பயன்பாடு” என்றும், “அரசு ஆதரவு பெற்ற நட்பு முதலாளித்துவம்” என்றும் விமர்சித்தனர்.

மோடி – அதானி உறவு குறித்து வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுவதாவது :

அதானி மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் உறவு 1990களில் குஜராத்தில் தொடங்கியது.

அதானி அப்போது முந்த்ரா துறைமுகத்தை உருவாக்கினார், அதை மோடி கவனித்தார்.

2014ல் மோடி பிரதமராக போட்டியிட்ட போது, தேர்தல் பிரச்சாரப் பயணங்களுக்கு அதானி குழுமத்தின் ஜெட் விமானத்தை பயன்படுத்தும் அளவுக்கு நட்பாக வளர்ந்ததோடு “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்று ஃபெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டார்.

பின்னர், அதானியின் நிறுவனங்களின் வளர்ச்சி மோடியின் வளர்ச்சி திட்டங்களில் முக்கியமான ஒன்றாக மாறின — துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள், சிமென்ட் தொழிற்சாலைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் அனைத்திலும் அவர் முன்னிலை பெற்றார்.

இந்நிலையில், 2024ல், அமெரிக்க நீதித்துறை (DOJ) அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் ஆறு நெருங்கியவர்களுக்கு எதிராக 250 மில்லியன் டாலர் லஞ்சம் மற்றும் மோசடி வழக்கில் குற்றம் சாட்டியது.

அதே நேரத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) சிவில் வழக்கையும் தொடர்ந்தது.

அதானி குழுமம் இதனை மறுத்து, “இவை தனிநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள், எங்கள் நிறுவனங்கள் மீதானதல்ல,” என்று தெரிவித்தது.

அதேவேளையில் இந்தியாவில், அதானி குழுமப் பத்திரங்களில் LIC நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் (சுமார் ₹34,000 கோடி) முதலீடு செய்தது.

 

மேலும் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்களில் 507 மில்லியன் டாலர் (சுமார் ₹4,200 கோடி) மதிப்பில் பங்குகளை அதிகரித்தது.

அரசு அதிகாரிகள் இதை, “சந்தை நம்பிக்கையை நிலைநாட்டும் நடவடிக்கை” என்று விளக்கினர்.

ஆனால் விமர்சகர்கள், “இது பொது நிதியைப் பயன்படுத்தி தனியார் நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சி,” என்று குற்றம் சாட்டினர்.

அதானி குழுமம் வாஷிங்டன் போஸ்டுக்கு எழுதிய பதிலில், “LIC பல நிறுவனங்களில் முதலீடு செய்கிறது; அதானிக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கவில்லை” என்று கூறியிருந்தது.

இந்த மொத்த விவகாரம் குறித்து எல்ஐசி-யோ, DFS மற்றும் பிரதமர் அலுவலகமோ கருத்து தெரிவிக்க மறுத்தன.

அதானி குழுமத்தை ஆதரிப்பவர்கள், “அவரது நிறுவனங்கள் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகின்றன; அதனால் இது நீண்டகால முதலீடாகக் கருதப்பட வேண்டும்,” என்று இப்போதும் வாதிடுகின்றனர்.

“சாதாரண மக்களின் பிரீமியம் தொகை ஒரு தனியார் குழுமத்திற்கான நிதியாக மாறுவது கவலைக்குரியது.”

“எல்ஐசிக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால், அதனை மீட்க வரி செலுத்துவோர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.”

“அதானி அரசியல் அதிகாரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அவருக்கு விதிகள் தளர்த்தப்படுகின்றன” என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

LIC நிதியுதவி, அதானி குழுமத்தை கடன் நெருக்கடியில் இருந்து மீட்டாலும், இது அரசியல்–பொருளாதார உறவு, பொது நிதி பயன்பாடு, மற்றும் நிர்வாகத் தெளிவு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டபடி, “அரசு இதை நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடாகக் கூறுகிறது; ஆனால் விமர்சகர்கள், அது ஒரே தனி நபரின் செல்வத்தை காக்கும் நடவடிக்கை” என்று குறிப்பிடுகின்றனர்.