சென்னை; அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்அளவை எட்டும் நிலையில் உள்ளதால், ஏரிக்கு வரும் உபரி நீர் அடையாற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதையடுத்து அடையாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து அடையாறு கரையோர பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடி செலவில் மிகப்பெரிய திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று, அடையாறு முகத்துவாரம் பகுதியை ஆய்வு செய்தார். சென்னை பட்டினம்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.