சென்னை: வேளச்சேரி அருகே  உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் அதிர்ச்சி  குற்றச்சாட்டை கூறி உள்ளது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலத்தின் (Pallikaranai Ramsar wetland) உள்ளே, சுமார் ரூ. 2,000 கோடி மதிப்பிலான மாபெரும் அடுக்குமாடிக் கட்டுமானத் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசின் முக்கியத் துறைகளான சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆகியவை சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் (Arappor Iyakkam) அதிர்ச்சி தகவலை  வெளியிட்டுள்ளது.

சதுப்பு நிலப் பாதுகாப்பு ஒப்பந்தம் (ராம்சார் ஒப்பந்தம்) மற்றும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, ராம்சார் நிலங்களில் எந்தவொரு கட்டுமானத்துக்கும் அனுமதி கொடுக்க முடியாது.  ஆனால், சட்டத்தைமீறி, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரியல் எஸ்டேட் மோசடி நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி உள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: “சென்னை பெரும்பாக்கத் தில் உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில், பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் (Brigade Morgan Heights) என்னும் தனியார் நிறுவனம், 1,250 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.

சதுப்பு நிலப் பாதுகாப்பு ஒப்பந்தம் (ராம்சார் ஒப்பந்தம்) மற்றும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, ராம்சார் நிலங்களில் எந்தவொரு கட்டுமானத்துக்கும் அனுமதி கொடுக்க முடியாது. அந்த நிலங்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கடமை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2022 ஏப்ரல் 8-ம் தேதி 3,080 ஏக்கர் அளவிற்கு ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. இதில் 1,375 ஏக்கரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களை மீட்க வேண்டியது அரசின் கடமை.

ராம்சார் பகுதிக்கு உட்பட்ட சர்வே எண்கள் 453, 495, 496, 497, 498-ல் உள்ள கிட்டத்தட்ட 14.7 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியும், கட்டுமான அனுமதியும் கோரியுள்ளது.

மின்னல் வேகத்தில் வழங்கப்பட்ட ஒப்புதல்

“ராம்சார் நிலத்தில் இது பதிவான பிறகும், பிரிகேட் நிறுவனம் 2022 ஜூலையில் சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்பாகக் குறிப்பு விதிமுறைகள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்கிறது.

குறிப்பிட்ட இந்த இடம் ராம்சார் நிலத்திற்கு 65 மீட்டர் தொலைவில் உள்ளதாக வனத்துறை பொய் சொல்கிறது.

மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, ஜனவரி 20, 2025 அன்று மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தை வழங்குகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (CMDA) மின்னல் வேகத்தில் கட்டுமான அனுமதியை வழங்கியுள்ளது.

சி.எம்.டி.ஏ இந்த நிலத்தை சரிபார்க்காமல் அவசரமாக அனுமதி கொடுத்திருக்கிறது.

இந்தச் சட்டவிரோத அனுமதியால், அந்தப் பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை இந்தத் துறைகள் செய்துள்ளன.

₹100 கோடி லஞ்சம்? நீதிமன்றத்தை நாடுவோம்!

இந்தச் சட்டவிரோத அனுமதியில் எத்தனை கோடி ரூபாய் கைமாறியது? ₹100 கோடிக்கு மேலாக லஞ்சமாகக் கைமாறியுள்ளதாகத் தெரியவருகிறது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். எனவே, அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அந்த நிலத்தை மீட்க வேண்டும்.

அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் வீடுகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பெரும் வெள்ளத்துக்குப் பிறகு நிலங்களைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இல்லையெனில், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்,” என ஜெயராம் வெங்கடேசன் கூறினார்.

புகார் பதிவு:

இந்த பற்றிய புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறை, முதலமைச்சர், தலைமைச் செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை எனப் பத்து சம்பந்தப்பட்ட பொது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளது.

நிறுவனத்தின் விளக்கம்

பிரிகேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “பிரிகேட் மோர்கன் ஹைட்ஸ், நில உரிமையாளருடன் கூட்டாகச் செயல்படுத்தப்படும் திட்டம். இந்த நிலம் தனியாருக்குச் சொந்தமானது. நாங்கள் அனைத்துச் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கும் இணங்கினோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்கப்பட்டது,” என்று பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2000 கோடி ரியல் எஸ்டேட் செய்ய பள்ளிக்கரணை சதுப்பு நல்ல ராம்சார் நிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் தளத்திற்குள் எந்தெந்த சர்வே எண்கள் வருகிறது என்பதை அறப்போர் இயக்கம் வெளியிடவில்லை. ராம்சார் நிலத்தை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கீழ் வரும் தமிழ்நாடு ஈரநில ஆணையம் தான் வெளியிட்டுள்ளது . அதையேதான் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமமும் வெளியிட்டுள்ளது.

இந்தத் துறைகளுக்கு பிரிகேட் மார்கன் திட்டத்தின் சர்வே எண்கள் 453, 495, 496, 496, 498 ஆகியவை ராம்சார் தளத்திற்கு உள்ளே வருகிறது என்று நன்றாக தெரியும். சட்டப்படி ராம்சார் நிலத்திற்குள் எந்த  கட்டுமானத்தையும் அனுமதிக்க கூடாது என்பதும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இருப்பினும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான சுற்றுச்சூழல் துறை பிரிகேட் நிறுவனத்திற்கு 15 ஏக்கர் அளவில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி தருகிறது.

அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் துறை கட்டுமான அனுமதி கொடுக்கிறது.

அப்போதைய அமைச்சர் பொன்முடி தலைமையிலான வனத்துறை பொய்யான அறிக்கையை கொடுப்பது மட்டுமில்லாமல் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரநில ஆணையம் ராம்சார் நிலத்தை பாதுகாக்காமல் மக்களுக்கு துரோகம் செய்கிறது.

இது அனைத்திற்கும் ஒரே காரணம் லஞ்சம் மற்றும் ஊழல் ! மக்களாகிய நாம் வெள்ளத்தில் எப்படி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. கொள்ளையடிப்பது மட்டுமே எங்கள் கொள்கை என்று தமிழ்நாடு திமுக அரசு இருப்பதால்தான்.

ஒரு பக்கம் முதலமைச்சர்  ராம்சார் நிலத்தை பாதுகாப்பேன் என்று சொல்வார். மறுபக்கம் ராம்சார் நிலத்திலேயே 2000 கோடி முதலீடு என்று அவரும் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவும் பிரிகேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இத்தனை துறைகள் சம்பந்தப்பட்ட இந்த ஊழலில் இந்தத் துறைகளில் இருக்கும் யாராவது ஒரு ஐஏஎஸ் அதிகாரியோ ஒரு அமைச்சரோ நினைத்திருந்தால் கூட இந்த ஊழலை தடுத்து இருக்கலாம். அந்த ஒருவர் கூட அரசில் இல்லாததுதான் கொடுமை!

சுற்றுச்சூழல் பற்றி தினமும் ட்வீட் போடும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு IAS இந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வாரா??

தனக்குத்தானே அப்பழுக்கற்ற அதிகாரி என்று சான்றிதழ் கொடுத்துக்கொண்ட CMDA செயலர் பிரகாஷ் IAS கட்டுமான அனுமதியை ரத்து செய்வாரா??

மக்களின் கேள்விக்கு அரசின் பதில் என்ன?

Detail Video Hereyoutu.be/Brtq6ST4WDI?si