சென்னை: சென்னை மாநகரத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக புறநகர் பகுதிகளில்  5 புதிய பணிமனைகள்  அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு  செய்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகர பேருந்துகள் சென்னை  மற்றும் புற நகரில்  இயக்கும் வகையில், அதற்கு  வசதியாக , ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்து அதற்கான  இடங்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில்  தற்போது 700 வழித்தடங்களில் 3,233 மாநகர  பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன.  தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு , திருவள்ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் என மாநகர போக்குவரத்து கழகத்தின் எல்லை மேலும் அதிகரித்துள்ளது.

ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் மேப்படுத்தப்படவில்லை. அத்துடன், மக்கள்  வெளி இடங்களுக்கு செல்ல போதிய அளவில் பேருந்துகள் கிடையாது. ஆனால் நிலத்தின் மதிப்பு மட்டுமே உச்சம் தொட்டுள்ளது. அதனால், புறநகர் பகுதி மக்கள், தங்களுக்கு மாநகராட்சி தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு புறநகர் பகுதி மக்களையும், மாநகர மக்களுடன் ஒன்றிணைக்கும் வகையில் புதிதாக 5 பேருந்து பணிகளை நிறுவ முடிவு செய்துள்ளது. ஏற்கனவே  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தது,  குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.  இதுமட்டுமின்றி, , கூடுதல் பேருந்து இயக்க வசதியாக, ஐந்து இடங்களில் புதிதாக பணிமனைகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி,  திருவள்ளூர், வெளிவட்ட சாலை பகுதியில் வரதராஜபுரம், தையூர், தரமணி, பாடியநல்லுார் அருகில் ஆட்டந்தாங்கல் என, தேர்வு செய்யப்பட்ட இடங்களில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்க உள்ளோம். இதையடுத்து டெண்டர் வெளியிட்டு, பேருந்து பராமரிப்புக்கான அதி நவீன கருவிகளுடன் புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக போக்குவரத்த்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.