அமெரிக்க அரசு செயல்பாடுகள் தற்காலிக நிறுத்தம் இன்று 22வது நாளாக நீடிக்கும் நிலையில் அந்நாட்டின் வரலாற்றில் இது 2வது மிக நீண்ட முடக்கமாக இடம்பெற்றுள்ளது.
1995க்குப் பிறகு 7வது முறையாக அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகபட்சமாக 35 நாட்கள் முடக்கப்பட்டது, இதையடுத்து 1995 டிசம்பர் மாதம் 21 நாட்கள் முடக்கப்பட்டது.

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 நாட்கள் நீடித்தது, மற்ற அனைத்தும் ஒரு சில நாட்களில் தடை நீக்கப்பட்டது.
கிளின்டன் ஆட்சியில் இரண்டு முறையும், ஒபாமா ஒரு முறையும் முடக்கத்தை சந்தித்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் முதல் முறை பதவியேற்ற போது மூன்று முறை முடக்கத்தை சந்தித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முடக்கத்தை எதிர்கொள்கிறார்.
ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இடையே ஒபாமா மருத்துவ காப்பீட்டு மானியம் தொடர்பாக எழுந்துள்ள மோதல் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பலத்தை பிரயோகப்படுத்தி எதிர்கதியினர் டிரம்ப் நிர்வாகத்தின் நிதி தொடர்பான மசோதாக்கள் எதுவும் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
மருத்துவ காப்பீட்டிற்கான மானியத்தை அதிபர் டிரம்ப் அதிகரித்து வழங்க மறுத்துவருவதால் எதிர்கட்சியினருக்கு ஆதரவாக மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் 60 வாக்குகள் அவசியம் என்ற நிலையில் டிரம்ப் நிர்வாகம் 55 வாக்குகளை மட்டுமே பெற்றதால் நிதி நிர்வாகம் மொத்தமாக முடங்கியுள்ளது.
இதனால், இராணுவம், காவல்துறை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் போன்ற அத்தியாவசிய ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டியுள்ளது.
தவிர, 7.5 லட்சம் ஊழியர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் உள்ளதால் வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% சரிவை சந்தித்து வருகிறது.
அதேவேளையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பைடன் ஆட்சிக்காலத்தில் அரசு பணியில் சேர்ந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இருகட்சியினருக்கும் இடையிலான இந்த அதிகார சண்டையால் பல லட்சம் அரசு ஊழியர்கள் திண்டாடி வருவதோடு இந்த முடக்கம் எப்போதும் சரியாகும் என்ற கவலையில் உள்ளனர்.