சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடல், அரபிக்கடல் என இரு கடல்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழைவரை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 25ந்தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து மழை அதிகளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து தனது எக்ஸ்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!
இவ்வாறு கூறி உள்ளார்.