கோவை:  முதலமைச்சர் ஸ்டாலினால் சமீபத்தில் திறக்கப்பட்ட  அவிநாசி ஜி.டி. நாயுடு பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் பரிதாபமாக பலியாகி னர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில்,   ஜிடி நாயுடு மேம்பாலம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது, பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய கார் மோதியதில், காரில் இருந்த  3 பேர் பலியாகி இருப்ப தாக கூறப்படுகிறது.

 கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அவினாசி பகுதியில்  சுமார் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட மேம்பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பகுதிகளைக் கடக்க முன்பு 45 நிமிடங்கள் வரை ஆன நிலையில் தற்போது பத்து நிமிடங்களில் மேம்பாலத்தில் இந்த சாலையைக் கடக்க முடிகின்றது.

இந்த புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், ஏராளமானோர் இந்த பாலத்தை உபயோகித்து வருகின்றனர். மேலும் பலர், பாலத்தில் இருந்து அந்த பகுதியை ரசித்தும் வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் பகுதிக்கு ஜிடி மேம்பாலத்தில் சென்ற கார், பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது கட்டுப்பட்டை இழந்து பாலத்தின் இறங்கும் பகுதியில்,   சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் விபத்துக்குள்ளான காரில் இருந்த இருகூரைச் சேர்ந்த சேக் உசேன் மற்றும் அவருடன் பயணித்த பெண் மற்றும் இளைஞர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கார் அப்பளமாக நொறுங்கிய நிலையில் காரில் இருந்த 3 பேரின் உடல்களையும் நீண்ட போராட்டத்திற்குப் பின் போலீஸார் மீட்டு, கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.