கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு தாலிபான் படைகள் பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து இந்த மோதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பதிலடியாக, பாகிஸ்தான் படைகள் பல ஆப்கானிஸ்தான் எல்லைச் சாவடிகளை திறம்பட குறிவைத்ததாக பாக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆப்கானிஸ்தான் சாவடிகள் மற்றும் போராளி அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் பல ஆப்கானிய வீரர்களும் குவாரிஜும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளது.

கைபர்-பக்துன்க்வாவில் உள்ள அங்கூர் அடா, பஜௌர், குர்ராம், டிர், சித்ரால் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள பாரம்சா உள்ளிட்ட பல முக்கிய சாவடிகளில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிகிறது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள குனார், நங்கர்ஹார், பாக்டிகா, கோஸ்ட் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களைச் சேர்ந்த தலிபான் அதிகாரிகள் மோதல்களை உறுதிப்படுத்தினர்.

குவாரிஜ் என்று அழைக்கப்படும் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) இயக்கத்தினரை பாகிஸ்தான் எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவதை எளிதாக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகரில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக காபூல் இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து மோதல்கள் வெடித்ததாக தலிபான் எல்லைப் படைகள் தெரிவித்தன.

பாகிஸ்தான் படைகளின் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கிழக்கில் உள்ள தலிபான் எல்லைப் படைகள் பல்வேறு எல்லைப் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் படைகளின் நிலைகளுக்கு எதிராக கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளதாக ஆப்கானிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் குறித்து சவுதி அரேபியா மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.

“பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் நடைபெறும் பதட்டங்கள் மற்றும் மோதல்களை சவுதி அரேபியா கவலையுடன் கண்காணித்து வருகிறது.

பதற்றத்தைக் குறைப்பதற்கும் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பதற்கும் இருநாடுகளும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்” என்றும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் (MOFA) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.