சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் காணப்படும் 3400 சாலைகளின் சாதிப் பெயர்கள் விரைவில் மாற்றம்  செய்யப்பட உள்ளதாக துணைமேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் 100 சதவிகிதம் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறினார்.

தமிழக அரசு சாதிப்பெயர்களை மாற்ற அரசாணை வெளியிட்ட நிலையில் சென்னையில் மட்டும் 3400 சாலைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.  அதன்படி,  சாதிப் பெயர்கள் குடும்பப் பெயர்களாக இருந்தால், அவை சுருக்கப்பட்டு முதலெழுத்துக்களாக மாற்றப்படும். பெயர்கள் முழுவதும் சாதிப் பெயர்களாக இருந்தால், அவை தலைவர்கள் அல்லது மலர்களின் பெயர்களால் மாற்றப்படும். பின்னொட்டுகளாக வரும் சாதிப் பெயர்கள் மட்டும் நீக்கப்படும், இது விரைவில்  செய்யப்படும்  என்று சென்னை துணை மேயர் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியில் 3,400க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. இதில் டாக்டர் நாயர் சாலை, ரெட்டி சாலை, வன்னியர் தெரு போன்ற சாதிப் பெயர்களைக் கொண்ட சாலைகளும் அடங்கும். இந்த சாலைகளுக்கு இனி தலைவர்கள் அல்லது மலர்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய துணைமேயர்,   சென்னை மாநகராட்சி , சாலைப் பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டு சாதிப் பெயர்களைக் கொண்ட சாலைகளின் பட்டியலை இறுதி செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. பேருந்து வழித்தட சாலைகள் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் என்.திருமுருகன், வருவாய்த் துறையிடம் இது குறித்து கேட்டிருப்பதாகவும், திங்கட்கிழமைக்குள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றவர்,  சென்னை மாநகராட்சியில் உள்ள 35,000 சாலைகளில் சுமார் 3,400 சாலைகள் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன.

மாநகரத்தின் மையப் பகுதிகளில் 2011க்கு முன்பே பெரும்பாலான சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. தற்போது, முன்பு தனி நகராட்சிகளாக இருந்த ஏழு சேர்க்கை மண்டலங்களில் உள்ள சாலைகளில்தான் இதுபோன்ற பெயர்கள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் நவம்பர் 19ஆம் தேதிக்குள் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

சாலைகள் அடையாளம் காணப்பட்டவுடன், கவுன்சிலர்கள் பகுதி சபை கூட்டங்களை நடத்தி புதிய பெயர்கள் குறித்து தீர்மானம் எடுப்பார்கள். “பொதுமக்களின் முடிவின் அடிப்படையிலேயே சாலைகளுக்குப் பெயர் சூட்டப்படும். இது குறித்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்,” என்று அவர் கூறினார்.

சாதிப் பெயர்கள் குடும்பப் பெயர்களாக இருந்தால், அவை சுருக்கப்பட்டு முதலெழுத்துக்களாக மாற்றப்படும். பெயர்கள் முழுவதும் சாதிப் பெயர்களாக இருந்தால், அவை தலைவர்கள் அல்லது மலர்களின் பெயர்களால் மாற்றப்படும். பின்னொட்டுகளாக வரும் சாதிப் பெயர்கள் மட்டும் நீக்கப்படும்.

உதாரணமாக, டி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை, கோபதி நாராயண சாலை என மாற்றப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தில், சீனிவாசா (ஐ) தெரு, பாலகிருஷ்ணா (என்) தெரு, சீனிவாசா (பி) தெரு என சாதிப் பெயர்கள் முதலெழுத்துக்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட சில சாலைகளில், கோடம்பாக்கத்தில் உள்ள ரெட்டி தெரு, வெங்கட ரெட்டி சாலை, வன்னியர் தெரு, மயிலாப்பூரில் உள்ள டாக்டர் நாயர் சாலை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ராமானுஜ ஐயர் தெரு, சூளைமேட்டில் உள்ள ரெட்டி ராமன் தெரு, சைதாப்பேட்டையில் உள்ள பிராமணர் தெரு ஆகியவை அடங்கும்.

புதிய பெயர்ப் பலகைகள் விரைவில் அமைக்கப்படும். இதற்காக மாநகராட்சி டெண்டர் விட உள்ளது. இந்தப் புதிய பலகைகள் 3D தொழில்நுட்பத்துடன், பிரதிபலிக்கும் விளக்குகளுடன் கூடியதாக இருக்கும். இந்த மாற்றம், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. சாதிப் பாகுபாடுகளைக் குறைத்து, அனைவரும் சமமாக வாழும் சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். புதிய பெயர்கள் மூலம், நமது தலைவர்களின் பெருமைகளையும், இயற்கையின் அழகையும் சாலைகள் பறைசாற்றும்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குபதில் கூறியவர்,  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கிய இடங்களில், இந்த ஆண்டு நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே சென்னையில் புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.  தாழ்வான பகுதிகளில் தேங்கி  யிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகளை ஆறே மாதங்களில் முடித்து விட்டதாக குறிப்பிட்ட அவர், 90 சதவீதம் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வரும் காலங்களில் சென்னையில் 100 சதவீதம் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.