தூத்துக்குடி: பிரபலமான குலசை தசரா திருவிழாவின்  சூரசம்ஹாரம்  இன்று இரவு குலசை கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் நாளான இன்று இரவு (அக்டோபர் 2ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு பல லட்சக்கண்கானவர்கள் குவிந்து வருவதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரையில், கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா விழா செப்டம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குலசை முத்தாரம்மனுக்க பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, காப்பு கட்டி, பல்வேறு வேடம் அணிந்து, குழுக்களாகவும் தனிப்பட்ட முறையிலும் ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெற்று வருகின்றனர்.

தசரா விழாவையொட்டி, குலசை மற்றும், திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தசரா குழுக்களின் சார்பில் பிரம்மாண்ட செட்கள் திரைப்பட செட் அமைப்பாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. காளி, அம்மன், சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த தசரா செட், கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காளியின் கண் திறக்கும் தருணமும், சிவன் தலையிலிருந்து கங்கை நீர் வடிவது போலவும், விஷ்ணு கையில் சக்கரம் சுழற்றுவது போலவும் தத்ரூபமாக அமைக்கப்பட்ட காட்சிகள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. மேலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த செட் இரவிலும் பகலிலும் ஒளி பாய்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இதனை தரிசிக்க வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ரசித்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆச்சரியத்துடன் இந்த தெய்வீகக் காட்சிகளைக் கண்டு மகிழ்கின்றனர்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிறப்பை மேலும் உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட செட், பக்தர்களுக்கு ஆன்மிக உணர்வையும், கலை அழகையும் ஒருசேர வழங்குகிறது.

இந்த நிலையில், தசரா பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியலாக இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி,  எ இன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு 11 மணிக்கு அடுத்ததாக சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குலசை சூரசம்ஹாரம், அன்னை முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்வதைக் குறிக்கிறது. இது தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்,  இந்த நிகழ்வில், அசுரனை வதம் செய்து, தீமைகளை அழித்து, நன்மைகளை நிலைநாட்டுவதை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய சூரசம்ஹாரத்துக்கு  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால்,  விழாவில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு வழங்கவும் ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். மேலும்,  பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, அதாவது குடிநீர், கழிப்பறை, சுகாதார வசதிகள் போன்றவற்றை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சூரசம்ஹார நிகழ்வின் போது கடற்கரை மற்றும் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன்,   பக்தர்களின் பாதுகாப்பிற்காக அவசரகால சேவைகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.