சென்னை: 2026ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசிய தலைமை, பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, மக்களவை உறுப்பினர் பைஜெயந்த் பாண்டா தமிழ்நாடு மாநில பாஜக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் மற்றும் இணைப் பொறுப்பாளரை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக பாஜகவின் தேசிய துணை தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஹைஜெயந்த் பாண்டா, நியமிக்கப் பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டின் தேர்தல் செயல்பாடுகளை கவனிப்பார் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இவருடன் இணைந்து பணியாற்ற கூட்டுறவு மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹலும் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், , “பாஜக தலைவர் ஜெய்பிரகாஷ் நட்டா உத்தரவின் பேரில் பைஜெயந்த் பாண்டா, தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராகவும், முரளிதர் மோஹல் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் போன்ற பணிகளை கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன.
களத்தில் வலுவாக இருக்கும் ஆளும் கட்சியான திமுக தொகுதிவாரியாக ஆய்வு, பூத் கமிட்டி ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தொகுதிவாரியாக சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தவெக தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லுமிடமெல்லாம் திமுகவையும், பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதே போல், அனைவரையும் திமுகவுக்கு எதிராக ஒன்று திரட்ட வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுகவுடன் இணைந்து பாஜகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாஜக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
