லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரிய  போராட்டத்துக்கு காரணமான  பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் வாங்சுக் வன்முறையை தூண்டிவிட்டதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. உண்ணாவிரதக் களத்தில் இருந்த போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடும் வகையில் தூண்டிவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 லடாக் யூனியன் பிரதேசம்,  சட்டமன்றம் இல்லாமல் நேரடியாக மத்திய அரசின் கீழ் துணை நிலை ஆளுநரின் பார்வையில் இயங்கி வருகிறது.  இதையடுத்து, அங்குள்ள மலைவாழ்  மக்கள், தங்களுக்கு மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்டவணையை லடாக்கிற்கு நீட்டிக்கக் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

இதை வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த போராட்டம்,  செப்டம்பர் 24 அன்று வன்முறையாக வெடித்தது. அவரது ஆதரவு  இளைஞர் குழு ஒன்று லே நகரில் பா.ஜ.க அலுவலகத்துக்கு தீ வைக்கவே போராட்டம் வன்முறையாக மாறியது.

இதையடுத்து,  காவல்துறைக்கும் இளைஞர்கள் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் 20 வயதுக்கும் குறைவானவர்கள். இதையடுத்து ராணுவத்தைக்கொண்டு, போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. லே நகரில் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம்  , `போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு முக்கிய காரணம் மக்களைத் தூண்டும் வகையில் சோனம் வாங்சுக் உரையாற்றியதுதான்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்ட, மறுபக்கம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில், லடாக் டிஜிபி எஸ்.டி. ஜம்வால் தலைமையிலான குழுவானது சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தற்போது கைதுசெய்திருக்கிறது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் சோனம் வாங்சுக்கின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “சோனம் வாங்சுக்கின் கைது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், ஆச்சரியமில்லை. இருப்பினும், மத்திய அரசு ஏன் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல், லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹனிஃபா, “தனது அமைதியான போராட்டத்துக்காக சோனம் வாங்சுக் கைதுசெய்யப்பட்டிருந்தால் அதை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.