திருமலை: ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடைபெறுவது வழக்கம். தற்போது திருப்பதி புரட்டாசி பிரமோற்சவமும் நடைபெறுவதால், இன்றும், நாளையும் கருட சேவை நடைபெற உள்ளது. மேலும், வரும் 29ந்தேதி வரை இரவில் எம்பெருமான் சேவைகள் நடைபெற இருப்பதால், இன்றுமுதல் திருப்பதி மலை பாதையில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9 நாட்கள் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.  பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கிறது.

திருப்பதியில் நடைபெறும் மிகவும் விசேஷமான உற்சவங்களில் கருட சேவையும் ஒன்று. இந்த உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி  இன்றும், நாளையும்  இரவு   கருட சேவை நடக்கிறது. அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனம் மீது எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றுமுதல் மலை பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்றுமுதல் வரும் 29ந்தேதி  காலை 6மணி வரை திருப்பதி மலைபாதையில், இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று  திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி உள்ளனர். டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழுமலையானை இலவச தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை காலதாமதம்  ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின்  பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

https://patrikai.com/purattasi-brahmotsavam-begins-at-tirupati-ezhumalaiyan-temple-today-vip-darshan-cancelled-full-details/