சென்னை: மத்தியஅரசு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், நடுத்தரவர்க்க மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒ ன்றான சோலார் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சோலார் சாதனங்கள் விலை குறைந்துள்ளது. அதன்படி, பேனல் விலை ரூ.5ஆயிரம் வரை குறைந்துள்ளது.
சோலார் பேனல் வரி குறைப்பு, மாநிலத்தின் பசுமை ஆற்றல் நோக்கத்தை ஊக்குவிக்கும் என கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சோலார் பலகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2025 செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வ;நதுள்ளது. இதனால் சோலார் எரிசக்தி சாதனங்கள் மலிவாகி, சாதாரண குடும்பங்களுக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாறும். இதன் மூலம் பசுமை ஆற்றல் வளர்ச்சி பெறுவதோடு, மின்சார கட்டணச் சுமையும் குறையும்.
சோலார் பலகைகளுக்கே அல்லாமல், சோலார் குக்கர், லாந்தர், வாட்டர் ஹீட்டர், பிவி செல், சோலார் ஜெனரேட்டர், காற்றாலை, குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், கடல் அலை மின் உற்பத்தி கருவிகள், ஹைட்ரஜன் வாகனங்கள் போன்ற பல பசுமை பொருட்கள் இனி குறைந்த வரியில் கிடைக்கின்றன. முன்பு 12% வரி காரணமாக விலை உயர்ந்திருந்தாலும், இப்போது 5% வரியில் மக்கள் நேரடியாக நன்மை பெறுகிறார்கள்.
உதாரணமாக, ரூ.80,000 மதிப்புள்ள சோலார் சிஸ்டம் வாங்கும் போது ரூ.9,600 வரி (12%) செலுத்த வேண்டும். மொத்தம் ரூ.89,600 ஆகும். ஆனால் இப்போது 5% வரியில் வெறும் ரூ.4,000 மட்டுமே சேரும். அதாவது மொத்தம் ரூ.84,000 ஆகும். இதனால் நேரடியாக ரூ.5,600 சேமிக்க முடியும். ஆனால் இந்த நன்மையை நிறுவனம் முழுமையாக வாடிக்கையாளரிடம் பகிர்ந்தால்தான் உண்மையான பலன் கிடைக்கும்.
இந்த நிலையில், சோலார் பேனல் வரி குறைப்பு , மாநிலத்தின் பசுமை ஆற்றல் நோக்கத்தை ஊக்குவிக்கும் என கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம்த பேசிய தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் அனீஷ் சேகர், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் பசுமை ஆற்றலில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றன. இதனை, கூடுதலாக மெருகேற்றும் வகையில் சென்னையை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கு ரூ.1 கோடி மானியத்துடன் கூடிய சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தியும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தனியார் ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்ய ஏற்கனவே டெண்டர் விடுத்துள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து சீரமைத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சோலார் சக்தியை எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கப்பெற செய்யும்.
அதுமட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியாளர்களையும் அதிகமாக சோலார் உபகரணங்களை வழங்கும் வகையில் ஊக்குவிக்கும். மேலும், மாநிலத்தின் பசுமை ஆற்றல் நோக்கத்தையும் ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஜிஎஸ்டி குறைந்ததால் மூலதனச் செலவு குறையும். வீட்டிற்கான சோலார் பேனல்கள் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை குறையக்கூடும்.
எங்களின் இலக்காக ஒரு லட்சம் வீடுகளுக்கு இந்த நிதியாண்டிற்குள் சூரிய மின்சக்தியை கொண்டு செல்வது தான். அதனை நோக்கி பயணித்து வருகின்றோம். இந்த வரி குறைப்பு மக்கள் மத்தியில் சூரிய மின்சக்தியை கூடுதலாக ஊக்கவிக்கவும், அதனை விரிவுபடுத்தவும் உதவும் என நம்புகின்றோம்.
இவ்வாறு பேசினார்.
தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஆலோசகர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வெங்கடாசலம் கூறுகையில், ‘ஜிஎஸ்டி குறைவால் சூரிய மற்றும் காற்று மின்திட்டங்களின் முதலீட்டு செலவு குறையும். இந்த ஜிஎஸ்டி குறைப்பு நாங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்த விஷயம். இதனால் மக்கள் மத்தியில் சோலார் அமைப்புகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது. விற்பனை கூடும் என நம்புகிறோம்,’ என்றார்.

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடுதான் சோலார் மின் உற்பத்தியில் 3வது இடம் வகிக்கிறது. அதேபோல், சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கவும், அதனை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையும் அரசு எடுத்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 76 ஆயிரம் சூரிய மின்சக்தி மேற்கூரை தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சோலார் தடுகள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சீரமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் தேசிய அளவில் பசுமை ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 5 வருடத்திற்குள் மாநிலம் முழுவதும் மொத்தம் 20 கிலோ வாட் சூரிய சக்தி மற்றும் 10 ஆயிரம் மெகாவாட் மின்கலன் கட்டமைப்பை உருவாக்கும் இலக்கை நோக்கி விரைந்து பயணிக்கும்.
சூரிய மின்சக்தி ஆற்றல் மூலமாக பசுமையான எரிசக்தியை உருவாக்குவது மட்டுமின்றி, ஒரு வீட்டிற்கு மட்டும் ஆண்டிற்கு சுமார் ஒரு டன் கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியீட்டை தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் சோலார் அமைப்பின் மொத்த கட்டணத்தில் குறிப்பிடத்தக்க விலைகுறைவை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக வீட்டுப்பயனுக்கு தேவையான 1 கிலோவாட் சோலார் அமைப்பின் விலை, ரூ.30,000 முதல் ரூ.32,000 வரை இருந்தது. தற்போது, ரூ.25,000 முதல் ரூ.27,000 வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.