டெல்லி: தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம், தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்துகிறது.
தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான கடைசி இரண்டு சுற்று வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, ‘வாக்கு திருட்டு’ என குறிப்பிட்டு பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர்களின் பெயர்கள் மோசடியாக சேர்க்கப்பட்டதாகவும், மராட்டியத்தில் மோசடியாக பலரின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை அண்மையில் வெளியிட்டு ராகுல் காந்தி தேசிய அரசியலில் பரபரப்பை பற்ற வைத்தார்.
ராகுலின் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் தவறான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார் என்றால் அவர் மீது இதுவரை ஏன் புகார் தரப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முறையான பதிலை கொடுக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை எளிதில் விடுவதாக தெரியவில்லை.
இந்நிலையில், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் தற்போது மாற்றியமைத்துள்ளது. அதாவது, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்கு எண்ணப்படும். அதைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
ஒருவேளை தபால் வாக்குகள் அதிகம் பதிவாகி அரை மணி நேரத்தில் முழுவதும் எண்ணி முடிக்கப்படாமல் இருந்தாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை துவங்கப்படும். கடைசியாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடைசியாக தபால் வாக்குகள் எண்ணப்படுவதால், நிறைய முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதை சரிசெய்யும் விதமாக வாக்குப்பதிவு மையத்தில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவான கடைசி இரண்டு சுற்று வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.