பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவியல் வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
மறைந்த லிபிய சர்வாதிகாரி மோமர் கடாபி 2007 ஆம் ஆண்டு தனது வெற்றி பெற்ற ஜனாதிபதி பதவிக்கு நிதியளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்ததை அடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2007ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸி லிபியாவிடமிருந்து பிரசாரத்துக்கு நிதியளிக்கப்பட்ட சதி திட்டத்தை தீட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. லிபியாவின் நிதியைப் பயன்படுத்தி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலின்போது, தன்னுடைய பிரசாரத்திற்கு நிதியளிக்கும் திட்டத்தில் குற்றவியல் சதித்திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாரிஸ் நீதிமன்றம், முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில், செப்டம்பர் 25ந்தேதி அன்று அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது வயதை கருத்தில்கொண்டு, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும்கூட சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. மேலும், அவரது தண்டனை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 70 வயதான சர்கோஸி, கைவிலங்குடன் நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் அவமானத்தைத் தவிர்க்கும் வகையில், தண்டனை தொடங்கும் தேதி பிறகு அறிவிக்கப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005 முதல் 2007-ஆம் ஆண்டு வரை இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர உதவிகளை மேற்கொள்ளவும், அதற்கு ஈடாக லிபியாவின் நிதியைப் பெற்று, 2007ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது தொடர்பான சதித்திட்டத்தில் தொடர்பு கொண்டிருந்தது நிரூபிக்கப்பட்டிருப்பதால், சர்கோஸி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் நல்வாய்ப்பாக, இதே குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஊழல், சட்டவிரோத பிரசார நிதி பெறுதல், பொது நிதியை மோசடி செய்ததை மறைத்தல் உள்ளிட்ட மூன்று மிக முக்கியக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பைக் கேட்ட சர்கோஸி, தான் மிகவும் மோசமான நியாயமற்ற தீர்ப்புக்கு ஆளானதாகவும், நிச்சயம் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு ஒரு அநியாயம் என்று அவர் நீதிமன்றத்தில் கத்தினார்.
பிரான்ஸ் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன், மக்களே – நீங்கள் எனக்கு வாக்களித்தீர்களோ இல்லையோ, நீங்கள் என்னை ஆதரித்தீர்களோ இல்லையோ – இப்போது என்ன நடக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். உண்மையில், வெறுப்புக்கு எல்லையே இல்லை என்றும் அவர் தன்னுடைய கருத்தை வலிமையாகப் பதிவு செய்தார். நான் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டாலும்கூட, அதை தலைநிமிர்ந்து செய்வேன் என்று குறிப்பிட்டார்.