உலகளவில் விவசாய வர்த்தகம் கொந்தளித்துள்ளதற்கு டிரம்பின் வரிகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளது.
அமெரிக்க விவசாயப் பொருட்களை மற்ற நாடுகள் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கை மாற்றமடைந்துள்ளது, போதுமான அளவு வாங்காத நாடுகளுக்கு வரிகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே புதிய வர்த்தக மோதலுக்கு வழிவகுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து சோயாபீன் வாங்குவதை நிறுத்த சீனா முடிவு செய்துள்ளது.

இதனால், சோயாபீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான அமெரிக்காவில் சோயாபீன் தேக்கமடைந்து வருகிறது.
2024/25 ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 28% சோயாபீன் அமெரிக்காவில் உற்பத்தியானது. இதில், முக்கிய உற்பத்தி செய்யும் மாநிலங்களான இல்லினாய்ஸ் (16%), அயோவா (14%), இந்தியானா (8%), மினசோட்டா (8%) மற்றும் ஓஹியோ (8%) ஆகியவை தோராயமாக 118.84 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது.
அமெரிக்க வேளாண்மைத் துறையின் (USDA) தரவுகளின்படி, அமெரிக்காவில் பயிரிடப்படும் சோயாபீன்களில் 90% க்கும் அதிகமானவை களைக்கொல்லி சகிப்புத்தன்மை (HT) மரபணு மாற்றப்பட்ட (GM) வகைகளைச் சேர்ந்தவை.
சோயாபீன்களில் புற்றுநோய் உண்டாக்கும் களைக்கொல்லிகள் மற்றும் கிளைபோசேட் போன்ற பூச்சிக்கொல்லிகளின் ஆர்கனோபோசேட் வகை தெளிக்கப்படுகிறது.
$242.7 பில்லியன் விவசாய வருவாயில் 45% மரபணு மாற்றப்பட்ட சோளம் மற்றும் சோயாபீன் ஆகியவற்றை உற்பத்திசெய்யும் அமெரிக்க விவசாயிகளின் பங்களிப்பாக உள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், கால்நடை தீவனம் மற்றும் எத்தனால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த சோயாபீன்களை சீனா அதிகளவு வாங்கிவந்த நிலையில் தற்போது $45.8 பில்லியன் வருமானம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் தேக்கமடைந்து வரும் சோயாபீன்களை எந்த சந்தையில் தள்ளிவிடுவது என்று டிரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.