அமெரிக்கா, புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுவரை சில ஆயிரம் டாலரே இருந்த நிலையில், இப்போது கட்டணம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

பெண்கள் முன்னேறி வரும் நிலையில், புதிய கட்டணம் அவர்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

H-1B திட்டத்தில் பெண்கள் பொதுவாக ஆண்களை விடக் குறைவாகச் சம்பாதிப்பதால் புதிய விசா கட்டணம் குறிப்பாக இளம் இந்தியப் பெண்களுக்கு பெரும் சவாலாக மாறும் என்று தி இந்து நாளிதழ் தரவுகளுடன் தெரிவித்துள்ளது.

2024 நிதியாண்டில் வேலையில் தொடர்ந்து நீடித்தவர்களில் 74% ஆண்கள், 26% பெண்கள்.

புதிதாக வேலைக்கு அங்கீகரிக்கப்பட்டவர்களில் 37% பேர் பெண்கள்.

புதிய H-1B விண்ணப்பதாரர்களின் நடுத்தர சம்பளம் சராசரியாக $97,000. இதில் பெண்கள் சராசரியாக $91,000; ஆண்கள் $99,000 சம்பாதிக்கிறார்கள்.

குறைந்த வருமானப் பகுதியில், பெண்கள் $71,000 சம்பாதிக்கிறார்கள்; ஆண்கள் $80,000.

புதிய வேலைக்கு அங்கீகரிக்கப்பட்ட பெண்களில் 75% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். பெண்களில் 44% பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் (ஆண்களில் 39%).

உயர் கல்வி இருந்தபோதும், கட்டண உயர்வு அவர்களை அதிகம் பாதிக்கும். புதிய $100,000 கட்டணம், முதலாளிகளுக்கு புதிய விண்ணப்பதாரர்களுக்கு நிதியுதவி செய்வது சாத்தியமற்றதாக மாற்றுகிறது. இதன் தாக்கம் இளம் இந்தியப் பெண்கள் மீது மிகக் கடுமையாக இருக்கும் என்று தி இந்து வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது.