சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பகிசன், 34 வயதான இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் இவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இவரை ‘நாடற்றவர்’ என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாவதும் தெரிவித்துள்ளது.

பகிசனின் பெற்றோர் ரவீந்திரன் மற்றும் ஜெயா இலங்கையில் நடைபெற்ற இன மோதலை அடுத்து திரிகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு 1991ம் ஆண்டு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணியான ரவீந்திரனின் மனைவி ஜெயாவை புதுக்கோட்டையில் உள்ள செந்தலை முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 1991ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பகிசனைப் பெற்றெடுத்த நிலையில் 1992ம் ஆண்டு அகதிகள் முகாம் பலவும் மூடப்பட்டு இலங்கைத் தமிழருக்கான சிறப்பு சான்றுகள் வழங்கப்பட்டு வெளியிடங்களில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சென்னை போரூரை அடுத்த ராமபுரத்தில் தங்கள் இருப்பிடததை அமைத்துக் கொண்ட நிலையில், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பகிசன் கல்வி பயின்றார்.

பின்னர், பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் தனியார் நிறுவனத்தில் வெப் டெவலப்பராக பணிபுரிந்து வருகிறார்.

ஆதார், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை வைத்திருக்கும் பகிசன் கடந்த 2024ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து தன் மனைவியின் பெயரை தனது பாஸ்போர்ட்டில் சேர்த்து மீண்டும் புதுபாஸ்போர்ட் வழங்க வலியுறுத்தி விண்ணப்பித்திருந்தார்.

இவரது விண்ணப்பத்தை ஏற்று 2025 மார்ச் 27ம் தேதி அவரது மனைவியின் பெயரைச் சேர்த்து புது பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பாஸ்போர்ட் தொடர்பான சரிபார்ப்பின் போது இந்திய குடியுரிமைச் சட்டம் 1986 திருத்தத்தின் அடிப்படையில் அவருக்கு இந்திய குடிமகனுக்கான பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பகிசன் தனக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று 2025 மே 8 ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்தார்.

நாடற்றவரின் விண்ணப்பம் என்று குறிப்பிட்டு இந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மதுரவாயல் தாசில்தாருக்கு ஆகஸ்ட் 4ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், இதன் ஒரு நகல் பகிசனுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதில் நாடற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதேவேளையில் இவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலி பாஸ்போர்ட் விசாரணை பிரிவு அதிகாரிகள் ஆகஸ்ட் 21ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் கோரி ஆகஸ்ட் 29ம் விண்ணப்பித்த நிலையில் செப். 4ம் தேதி பகிசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீனை எதிர்த்து அளிக்கப்பட மனுவில் பகிசன் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பகிசன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, 1955 குடியுரிமை சட்டத்தின் பிரிவு 6ன் கீழ் பிறப்பின் அடிப்படையில் பகிசனுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், அரசிடம் இருந்து பதில் பெறவேண்டி இருப்பதால் இடைக்கால நிவாரணமாக அக்டோபர் 8 வரை பகிசனை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.